அமெரிக்கா – கரோலினாவை தாக்கிய புளோரன்ஸ் புயலில் சிக்கி 4 பேர் பலி
அமெரிக்காவில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளது. அட்லாண்டிக் கடல் பகுதியில் உருவான புளோரன்ஸ் புயல் அமெரிக்காவின் கிழக்கு பகுதியை நோக்கி வந்தது. இதையடுத்து வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, விர்ஜினியா ஆகிய மாநிலங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த புயல் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று அதிகாரிகள் எச்சரித்ததை தொடர்ந்து, 3 மாகாணத்திலும் கடலோர பகுதி மக்கள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையில், வடக்கு கரோலினாவின் கடலோர பகுதிகளை புளோரன்ஸ் புயல் தாக்கியது. கடலோர பகுதிகளில் 100 கிமீ வேகத்தில் கடுமையான காற்று வீசியது. ஆக்ரோஷமாக எழுந்த கடல் அலைகள், கரையோர பகுதிகளை தாக்கியது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் கடல் நீர் புகுந்தது.
வடக்கு கரோலினாவில் புயலில் மரம் சாய்ந்து வீட்டின் மேல் விழுந்ததில் தாய், குழந்தை உள்பட 2 பேர் பலியாகினர்.
இதேபோல், புயல் தாக்கத்தில் சிக்கி மேலும் 2 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
புயலின் தாக்கத்தை குறைக்கும் வகையில், வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா, ஜார்ஜியா, விர்ஜினியா மற்றும் மேரிலாண்ட் நகர்களில் எமெர்ஜென்சி நிலை அறிவிக்கப்பட்டு இருந்தது.
புயல் தாக்கத்தை எதிர்கொள்ள வேண்டி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply