அமெரிக்க தேர்தலில் தலையிட சீனா முயற்சி : டிரம்ப்

உலகின் இரு பெரும் வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி, 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) சீனப்பொருட்கள் மீது கூடுதல் வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

இதற்கிடையே அமெரிக்காவில் வரும் நவம்பர் 6-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றம்சாட்டினார். இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “எங்கள் விவசாயிகள், பண்ணை தொழிலாளர்கள், தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவதின் மூலம், எங்கள் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்கு தீவிரமாக முயற்சிப்பதாக சீனா வெளிப்படையாகவே கூறி உள்ளது” என்று கூறினார்.

டிரம்பின் இந்த குற்றச்சாட்டை சீனா திட்டவட்டமாக மறுத்து உள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங்க் சுவாங்க் நேற்று கருத்து தெரிவிக்கையில், “சீனாவைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்கள்கூட, நாங்கள் பிற நாடுகளின் உள்விவகாரங்களில் தலையிட மாட்டோம் என்பதை அறிவார்கள்” என குறிப்பிட்டார். மேலும், “நாங்கள் எங்கள் அரசியலில் மற்றவர்களின் தலையீட்டை விரும்ப மாட்டோம். மற்றவர்களின் உள்நாட்டு அரசியலில் நாங்களும் தலையிட மாட்டோம்” என்று கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply