நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு : சீனா முடிவு

வல்லரசு நாடுகளான அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே வர்த்தகப்போர் மூண்டுள்ளது. இதன் காரணமாக சீனப்பொருட்கள் மீது அமெரிக்காவும், அமெரிக்க பொருட்கள் மீது சீனாவும் கூடுதல் வரி விதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

சீனாவின் 200 பில்லியன் டாலர் (சுமார் ரூ.14 லட்சம் கோடி) பொருட்கள் மீது சமீபத்தில் அமெரிக்கா கூடுதல் வரி விதிப்பை அறிவித்தது. உடனே சீனாவும் தன் பங்குக்கு அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 60 பில்லியன் டாலர் (சுமார் ரூ.4 லட்சத்து 20 ஆயிரம் கோடி) பொருட்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது.

இந்த நிலையில், நட்பு நாடுகளுக்கு சலுகை காட்டி அவர்களின் அரவணைப்பை பெற சீனா முடிவு செய்துள்ளது.

அந்த வகையில், நட்பு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற பொருட்கள் மீதான வரி விதிப்பின் அளவை குறைப்பதற்கு சீனா முடிவு செய்துள்ளதாக ‘புளும்பெர்க் நியூஸ்’ கூறுகிறது.

அதே நேரத்தில் சீனாவின் வரி குறைப்பு நடவடிக்கையால் எந்தெந்த நாடுகள் பலன் பெறும் என்பதை ‘புளும்பெர்க் நியூஸ்’ வெளியிடவில்லை.

வரி குறைப்பு நடவடிக்கை பற்றி டியான்ஜின் நகரில் உலக பொருளாதார மன்றத்தில் பேசுகையில் சீன பிரதமர் லீ கெகியான் குறிப்பிட்டார். அப்போது அவர் கூறும்போது, “சில பொருட்கள் மீதான இறக்குமதி வரியை சீனா தொடர்ந்து குறைக்கும்” என்றார். ஆனால் எந்தெந்த பொருட்கள் என்று அவர் கூறவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply