நல்லாட்சிக்கும் பொலிஸ் திணைக்களங்களுக்கம் மஹிந்த விடுத்துள்ள கடுமையான எச்சரிக்கை

சிறிலங்கா பொலிஸ் திணைக்களத்திலிருந்து ஸ்னைபர் ரக துப்பாக்கியொன்று காணாமல் போயிருந்தால் அது பாரிய பாதுகாப்பு அச்சுறுத்தலுக்குரிய விவகாரமாகிவிடும் என்று எச்சரித்துள்ள இலங்கையின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச, உடனடியாக இது குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டமொன்று இருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது ஸ்னைபர் துப்பாக்கி மாயமாகியுள்ள விவகாரம் பெரும் பிரச்சினைக்குரியது என்றும் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்ச நேற்றைய தினம் அவரது ஹம்பாந்தோட்டை கால்டன் இல்லத்தில் வைத்து எச்சரித்துள்ளார்.

இலங்கை அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கான சூழ்ச்சிகள் இடம்பெற்றதாக பொலிஸ் உளவாளியான நாமல் குமார வெளியிட்டிருந்த சர்ச்சைக்குரிய தகவலை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதனிடையே இந்த சதித்திட்டம் தொடர்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பிரதி பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா தற்காலிகமான பணியிலிருந்து இடை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், அவர் தொடர்பிலும் விசாரணைக்ள முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையிலேயே பயங்கரவாத விசாரணைப் பிரிவிலிருந்த ஸ்னைபர் ரக துப்பாக்கி ஒன்று மாயமாகியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதேவேளை பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்கு வழங்கப்பட்டிருந்த இரண்டு இயந்திரத் துப்பாக்கிகளையும் மீளப்பெற்றுள்ள இரகசிய பொலிசார், ஸ்னைபர் ரக துப்பாக்கி மாயமாகிய சம்பவம் தொடர்பிலும் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக நேற்று மாலை அறிவித்துள்ளனர்.

இதேவேளை இலங்கை அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாயவுக்கம் உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கின்றது.

இந்த நிலையில் அம்பாந்தோட்டை – தங்காலை பிரதேசத்திலுள்ள முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவின் கால்டன் இல்லத்தில் போயா தினத்தை முன்னிட்டு நேற்றைய தினம் விசேட சமய நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த நிகழ்வின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மஹிந்த ராஜபக்ச, பயங்கரவாத பொலிஸ் விசாரணைப் பிரிவிலிருந்த ஸ்னைபர் துப்பாக்கி மயமாகியுள்ள சம்பவம் தொடர்பில் கடும் விசனம் வெளியிட்டதுடன், இந்த நடவடிக்கைகள், ரணில் – மைத்திரி தலைமையிலான அரசாங்கத்தினால் நாட்டை ஆட்சிசெய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிட்டதையே உறுதிப்படுத்துவதாகவும் கூறினார்.

பொலிஸ் திணைக்களம் போன்றன அரசாங்க நிறுவனங்களாகும். ஸ்னைபர் துப்பாக்கிகள் அங்கிருந்து வெளியே இரகசியமாக கொண்டுசெல்லப்படுவதாயின் மிகப்பெரிய பிரச்சினைக்குரிய விடயமாகும். யாருக்கு எதிராக இதனை பயன்படுத்துகிறார்கள்?

ஜனாதிபதியையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளரையும் படுகொலை செய்ய சூழ்ச்சிகள் இடம்பெறுவதாக ஒருபுறம் கூறுகின்றனர். மறுபுறத்தில் எமக்கு அச்சுறுத்தல்கள். யாரை படுகொலை செய்வதற்காக இதனை பயன்படுத்துகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது.

ஜனாதிபதியை படுகொலை செய்யுங்கள் என்று கூறப்பட்ட குரல் பதிவுகளும் ஆதாரமாக உள்ள நிலையில் அவர்களை இதுவரை கைதுசெய்யவில்லை. இவற்றை யாருக்கு கூறுவது? தெற்கில் மட்டுமல்ல, நாடு முழுவதிலும் பாதாள உலகக் குழுவினர்கள் தலைதூக்கியுள்ளனர். வடக்கில் மிகவும் பயங்கரமான முறையில் தலைதூக்கியுள்ளனர். வடக்கில் ஆவா குழுவினரை அழிக்கப்போவதாக கூறுகிறார்கள்.

தெற்கு பொலிஸாருக்கும் இந்தப் பொறுப்பு உள்ளது. தினந்தோறும் படுகொலைகள் அரங்கேறுகின்றன. வரலாற்றில் முன்னர் எப்போதும் இல்லாமல் கொலைகள் இடம்பெறுகின்றன. எமது காலத்தில் இவை அனைத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டன.

இன்று மீண்டும் அவை தலைதூக்கியிருக்கின்றன. இந்நிலையில் அரசாங்கத்திற்கு இவற்றை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது. இது கவலைக்குரிய விடயமாகும் என்றும் தெரிவித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply