வெளிநாட்டு தலையீடு வேண்டாம் – எமது பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் : ஜனாதிபதி மைத்திரி

இலங்கை பிரச்சினைகளில் வெளிநாடுகளின் தலையீடு அவசியமில்லையென்றும், நாட்டிற்குள்ளேயே பிரச்சினையை தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்துள்ளார்.நாட்டின் சுயாதீனத் தன்மையை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் தான் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

ஐ.நா. பொதுச்சபையின் 73ஆவது அமர்வு நியுயோர்க்கில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது. இதில் இலங்கை நேரப்படி இன்று (புதன்கிழமை) அதிகாலை உரையாற்றிய ஜனாதிபதி மேற்குறித்த வேண்டுகோளை முன்வைத்தார்.

ஜனாதிபதி தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”நான் பதவிக்கு வரும்போது காணப்பட்ட ஜனாதிபதிக்கு காணப்பட்ட அதிகூடிய அதிகாரங்களை குறைத்து அதனை நாடாளுமன்றத்திற்கு வழங்கியுள்ளேன். அதனை சந்தோசமாகவே செய்தேன். கடந்த மூன்றரை வருட காலத்தில் பாரிய அபிவிருத்திகளை எட்டியுள்ளது.

மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மக்களின் சுதந்திரம், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் சுயாதீனமாக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், அப்போது காணப்பட்ட இலங்கை இப்போது இல்லையென்றும், பல முன்னேற்றகரமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளோம் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இலங்கைக்கு இன்று உலகில் எந்தவொரு எதிரி நாடுகளும் இல்லை. சகல நாடுகளுக்கும் ஒரு மத்தியஸ்த நாடாக எமது நாட்டை நோக்கும் அளவிற்கு மாற்றியமைத்துள்ளோம்.

விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை நிறைவுக்கு கொண்டுவந்த பின்னர், எமது ஆட்சிக்காலத்திலேயே பல செயற்பாடுகளை முன்னெடுத்தோம். தேசிய சமாதானம், நல்லிணக்கம், மீண்டும் யுத்தம் ஏற்படுவதை தடுத்தல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளோம். அந்தவகையில், மனித உரிமைகளை நிலைநாட்ட நாம் முன்னெடுக்கும் செயற்பாடுகளுக்கு உலக நாடுகள் ஆதரவளிக்க வேண்டும். நாடு பிளவுபடாமல் இருப்பதற்கு இராணுவம் ஆற்றிய பணி மகத்தானது.

மனித உரிமை விடயத்தில் புதிய நோக்கத்தில் எம்மை நோக்குங்கள். சமாதானம், நல்லிணக்கம், பொருளாதாரம், அபிவிருத்தி போன்ற சகல விடயங்களிலும் எமது நாடு முன்னோக்கிச் செல்கின்றது.

எமது பிரச்சினையை நாமே தீர்த்துக்கொள்ள இடமளியுங்கள். நாட்டின் சுயாதீனம் மிக முக்கியமானது. அந்தவகையில், எமது அர்ப்பணிப்புகள் மற்றும் புதிய செயற்பாடுகளுக்கு ஆதரவளியுங்கள்.

சர்வதேச தலையீடுகள், அழுத்தங்கள் மற்றும் சர்வதேச அச்சுறுத்தல்கள் எவையும் எமக்கு அவசியமில்லை. எமது நாட்டை சக்திமிக்கதாக மாற்ற இடமளியுங்கள். எமது நாட்டின் உரிமையை பாதுகாத்துக்கொண்டு முன்னோக்கிச் செல்ல இது மிகவும் முக்கியமானது” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply