வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் நிரந்தர அலுவலகம்

தமிழ் மக்கள் எதிர்கொண்டிருக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிளைக் கொண்ட ஆலோசனைக் குழு இந்த வாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் நலன்புரி நிலையங்களுக்குச் செல்லவுள்ளது.

இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று அவர்களுக்கான தேவைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றும் நோக்கில் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தலைமையில், அனைத்துத் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய ஆலோசனைக் குழுவொன்று கடந்தவாரம் நியமிக்கப்பட்டது.

இந்தக் குழுவினர் இவ்வாரம் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களுக்குச் சென்று மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டமிட்டுள்ளனர்.

வவுனியா மெனிக்பாம் நலன்புரி நிலையத்தில் நிரந்தரமான அலுவலகமொன்றை அமைப்பதற்கும் கடந்தவாரம் அலரிமாளிகையில் கூடிய இந்தக் குழுவினர் தீர்மானித்தனர். அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் பேச்சுவார்த்தையொன்றுக்கு வருமாறு அழைத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அங்கு ஆலோசனைக் குழுவொன்றை நியமிக்கும் திட்டத்தை அறிவித்திருந்தார்.

ஜனாதிபதியின் இந்த அழைப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் விடுக்கப்பட்டபோதும், போர்நிறுத்தத்துக்குச் செல்லுமாறு இதர தமிழ் கட்சிகள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கவில்லையெனக் கூறி அவர்கள் இந்தக் கூட்டத்தைப் புறக்கணித்திருந்தனர். எனினும், ஈ.பி.டி.பி., தமிழர் விடுதலைக் கூட்டணி, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ்., இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், மலையக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளும், அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரனும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த ஆலோசனைக் குழுவின் அடுத்த கூட்டத்தில் ஜே.வி.பி., லங்கா சமசமாஜக் கட்சி போன்ற இடதுசாரிக் கட்சிகளையும் இணைத்துக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆலோசனைக் குழுவை நியமித்திருப்பதானது இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களிலுள்ள மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான சிறந்ததொரு மைல்கல் என்று புளொட் அமைப்பின் தலைவர் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிளின் பிரதிநிதிகள் வடபகுதி மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் இடையில் ஒரு பாலமாகச் செயற்படவேண்டுமென ஜனாதிபதி முதலாவது கூட்டத்தில் கோரிக்கை விடுத்ததாக அவர் கூறினார்.

“இந்த நடவடிக்கையை நான் முழு அளவில் வரவேற்கிறேன். இடம்பெயர்ந்து பாதிக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இதன்மூலம் சாதகமான இலக்கொன்றை அடையமுடியும்” என சித்தார்த்தன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம், போர்நிறுத்தத்தை அமுல்படுத்தி, பொதுமக்களை சுதந்திரமாக வெளியே ஜனாதிபதி இணங்காத நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்வதில் அர்த்தம் எதுவும் இல்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களால் தெரிவுசெய்யப்பட்டவர், அவர்களின் கோரிக்கையை ஏற்று போர்நிறுத்தமொன்றைக் கடைப்பிடிக்க ஜனாதிபதி தயாரில்லையென்றால் அவருடன் பேச்சுநடத்தவதில் எந்தப் பயனுமில்லையென்றார் அவர்.

“அதேநேரம் நாம் முதலில் முகாம்களுக்குச் செல்லவேண்டும். ஆனால் ஜனாதிபதி அதற்கும் எமக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், சந்திப்பொன்றுக்கு அவர் அழைப்புவிடுத்தார். எனவே, இவ்வாறானதொரு சந்திப்பில் அர்த்தம் இல்லையென நாம் நினைத்தோம்” என்றார் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply