மன்னார் மனித புதைகுழியில் 17 சிறுவர்களின் எலும்புக்கூடுகள்
மன்னார் மனிதப் புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளில் 17 எழும்புக்கூடுகள் சிறுவர்களுடையதென தெரிவிக்கப்படுகின்றது.மன்னார் சதொச வளாகத்தில் காணப்படும் மனித புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமான நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்றுமுதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மனித புதைகுழியின் 30 வீதமான பகுதியில் நடத்தப்பட்டுள்ள அகழ்வின்போது 148 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அகழ்வாராய்ச்சிக்குப் பொறுப்பான பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். அவற்றில் 17 எலும்புக்கூடுகள சிறுவர்களுடையதென அவர் இன்று (புதன்கிழமை) கூறியுள்ளார்.
அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பகுதியில் மேலும் எலும்புக்கூடுகள் இருப்பதற்கான அடையாளங்கள் காணப்படுவதாகவும், இன்னும் ஒரு மாதத்திற்கு அகழ்வுப் பணிகளை தொடரவேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த மனிதப் புதைகுழியில் கண்டெடுக்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் மற்றும் மனித எச்சங்களை பகுப்பாய்வு செய்வதற்கு வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதற்குரிய நிதியுதவி தேவைப்படுவதால் இவ்விடயம் சுகாதார அமைச்சின் கவனத்திற்கும் கொண்டுசெல்லப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளுக்கான நிதியுதவி வழங்கப்படும் என்று காணாமல் போனோருக்கான அலுவலகத்தினர் தெரிவித்துள்ள போதிலும், அதில் ஏற்பட்டுள்ள முன்னேற்ற நிலைமை குறித்து இதுவரையில் அகழ்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ள குழுவினருக்குத் தெரிவிக்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மன்னார் மனித புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் கை கால் கட்டப்பட்டும், கூட்டாகவும் காணப்படுகின்ற நிலையில் அவை குறித்து சந்தேகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குறிப்பாக கடந்த காலத்தில் இடம்பெற்ற கடத்தல், காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற சம்பவங்களுடன் தொடர்பிருக்கலாமென சந்தேகிக்கின்ற நிலையில், அவற்றை ஆய்வுக்குட்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply