ரஷ்ய ஏவுகணையை மறந்து விடுங்கள்; இல்லாவிட்டால் பொருளாதார தடை: இந்தியாவுக்கு ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை

ரஷ்யாவுடன் எஸ்-400 ஏவுகணைகளை வாங்கும் திட்டத்தை இந்தியா கைவிட வேண்டும், இல்லையெனில் பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதின் இன்று இந்தியா வரும் நிலையில் இந்தியாவுக்கு அமெரிக்கா நெருக்கடி கொடுத்துள்ளது.

ரஷ்யா சுமார் 400 கி.மீ. தொலைவு வரை பாய்ந்து சென்று எதிரி ஏவுகணைகளை வழிமறித்து அழிக்கும் திறன் கொண்ட எஸ்-400 ரக ஏவுகணைகளை தயாரித்து வருகிறது. இந்த ஏவுகணைகளை ரஷ்யாவிடம் இருந்து சீனா ஏற்கெனவே வாங்கியுள்ளது. இதைத் தொடர்ந்து இந்த ஏவுகணைகளை வாங்க இந்தியாவும் ஆர்வம் காட்டியது.

இந்திய தரப்பில் முதல்கட்டமாக ரூ.40,000 கோடி மதிப்பில் ஐந்து ஏவுகணைகளை வாங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் ரஷ்யாவிடம் ராணுவ தளவாடங்களை வாங்கும் நாடுகள் தடை செய்யப்பட்ட பட்டியலின் கீழ் இந்தியா சேர்க்கப்பட்டு தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்தார். மேலும் ரஷ்யாவிடம் இருந்து ஆயுதங்களை வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்க வகை செய்யும் சட்டம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

எனினும் இதனை மீறி ரஷ்ய ஏவுகணைகளை வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதற்காக பிரதமர் மோடி ரஷ்யா சென்று அந்நாட்டு அதிபர் புதினை சந்தித்து ஒப்பந்தம் தொடர்பாக இறுதி செய்தார்.

இதனிடையே ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இன்று டெல்லி வருகிறார். அப்போது அவருடன், பிரதமர் மோடி விரிவான ஆலோசனை நடத்துகிறார். அப்போது சுமார் 40 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள எஸ்- 400 ஏவுகணைகள் வாங்குவதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட உள்ளது.

அதிபர் டிரம்ப் மட்டுமே இந்த தடையை நீக்கக்கூடிய அதிகாரம் படைத்தவராக அச்சட்டம் தெரிவிக்கிறது. அமெரிக்காவின் தடையை விலக்க அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை விடுக்க இந்தியா முடிவு செய்துள்ளது. திட்டமிட்டபடியே ரஷ்யாவுடன் ஏவுகணை ஒப்பந்தத்தை தொடர்வதற்கும் இந்தியா உறதியான நிலைப்பாடு எடுத்துள்ளது. இந்நிலையில் நேற்று மீண்டும் இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை சார்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘ரஷ்யாவிடம் இருந்து எஸ்- 400 ஏவுகணைகள் வாங்குவதற்கு ஏற்கெனவே அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதனையும் மீறி இந்தியா ஏவுகணைகளை வாங்கினால் அந்த நாட்டின் மீது பொருளாதார தடை விதிப்பதை தவிர அமெரிக்காவுக்கு வேறு வழியில்லை. ரஷ்யாவுடனான ஒப்பந்தத்தை கைவிடுவதுதான் இந்தியாவுக்கு நல்லது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply