சுவிஸில் ரெலோ தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி நிகழ்வு

தமிழ் ஈழ விடுதலை இயக்கம் – ரெலோ வின் தலைவர் சிறீ சபாரட்னம் மற்றும் ரெலோ போராளிகளின் 23வது நினைவஞ்சலி கடந்த 9.5.2009 அன்று சுவிஸில் உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சுவிஸ், பிரான்ஸ், ஜேர்மனி, பிரித்தானியா போன்ற நாடுகளில் இருந்து ரெலோவின் ஆரம்பகால உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர். ஆரம்ப கால நினைவுகளுடன் எம்மை விட்டு மறைந்த சிறீ அண்ணா மற்றும் தோழர்களும் நினைவு கூரப்பட்டனர்.

இயக்கங்களுக்கு இடையிலான ஒற்றுமையான செயற்பாட்டினால் மாத்திரமே எமது மக்களின் உரிமைகளை வென்றெடுக்க முடியும் என்று தீர்க்கதரிசனத்துடன் செயலாற்றிய தலைவர் சிறீ சபாரட்னம் எண்பதுகளின் ஆரம்பத்தில் ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்க உழைத்த தலைவர்களில் ஒருவராவர்.

தமிழ் ஈழ விடுதலைக் இயக்கம் (ரெலோ), தமிழீழ விடுதலை புலிகள் (எல்ரிரிஈ), ஈழப் புரட்சிகர மாணவர் கழகம் (ஈரோஸ்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) ஆகிய அமைப்புகள் இணைந்து ஈழ தேசிய விடுதலை முன்னணி (ஈஎன்எல்எவ்) என்ற `முதல்` கூட்டமைப்பு உருவாக மற்றைய அமைப்பு தலைவர்களுடன் அமரர் சிறீ சபாரட்னம் மெய்யாக சேர்ந்துழைத்தார்.

உண்மையான ஐக்கியத்தை தொடர்ந்து வலியுறுத்திய தன்னிகரில்லாத் தலைவர் சிறீ சபாரட்னம் போன்ற ஆளுமையுள்ள பல தலைவர்களை பாசிசம் பலிகொண்டதால் எமது மக்கள் இன்று அனாதைகளாக நிர்க்கதியான நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். எனவே, யுத்தத்தினால் இன்று அல்லல்படும் எமது மக்களுக்கு வெளிநாட்டில் உள்ள ரெலோ உறுப்பினர்களாகிய நாம் உடனடியாகச் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விரிவான கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்நினைவேந்தும் நிகழ்வில் கலந்து கொண்ட எல்லோருடைய கருத்துகளும் கேட்கப்பட்டு சிறீ ரெலோ- சுவிஸ் சார்பாக நான்கு பேர் கொண்ட நிர்வாகக்குழு தெரிவுசெய்யப்பட்டது. சுவிஸில் உள்ள ஏனைய ரெலோ உறுப்பினர்களையும் ஒருங்கிணைத்து யுத்தத்தால் இடம் பெயர்ந்துவந்த மக்களுக்கு சிறீ ரெலோ சார்பில் எம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய முடிவுசெய்யப்பட்டது.

அனைத்து ரெலோ உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஒன்றிணைந்து யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது மக்களுக்கு உதவ முன்வருமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

சிறீ ரெலோ – சுவிஸ்

(சுவிஸ் – கிரென்சன் பகுதில் 9 மே 2009 அன்று நிகழ்ந்த அமரர் சிறீ சபாரட்னம் அவர்களின் நினைவேந்தும் நிகழ்வில் எடுக்கப்பட்ட சில நிழல்படங்களை கிழே காணலாம்.)

 

 

மூலம்/ஆக்கம் : TELOnews


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply