இலங்கை ஒரு இனக் குழுவுக்கு மாத்திரம் சொந்தமான நாடல்ல : அமைச்சர் டளஸ் அழகப்பெரும
இந்த நாடு ஒரு இனக் குழுவுக்கு மட்டும் சொந்தமான நாடல்ல. தமிழ், முஸ்லிம்கள் மற்றும் மலே இனத்தவர்கள் இரண்டாம் தரப் பிரஜைகளல்ல. அவர்களும் இந்நாட்டுப் பிரஜைகளே என அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறினார். தேசிய ரயில்வே நூதனசாலை நேற்று மருதானை ஒல்கொட் மாவத்தையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதி யாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் மேலும் கூறியதாவது;
அனைவரையும் சமமாக மதிக்கும் இலங்கை நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு எமது அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. ஏனைய மதத்தவரை ஏற்று மதிக்கக் கூடிய நிலையை உருவாக்க முயன்று வருகிறோம்.இலங்கையிலுள்ள அப்பாவி பொதுமகன் ஒருவனுக்கு அநீதி இழைக்கப்பட்டால் அது குறித்து பேசுவதற்கு உலகில் உள்ள ஒவ்வொரு தனி மனிதனுக்கும் உரிமை உள்ளது.
ஆனால் பயங்கரவாதத்துக்கு எதிராக செயற்படுவது தொடர்பாக எமக்கு கற்பி க்கவோ ஆலோசனை வழங்கவோ எந்த நாட்டுக்கும் உரிமை கிடையாது. உலகில் எங்காவது ஒரு நாட்டில் தினமும் மோதல்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும். ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடைபெறும் யுத்தம் காரணமாக இலட்சக் கணக்கான பொதுமக்கள் இறந்து வரு கின்றனர்.
ஆனால், இலங்கை இராணுவம் முன் னெடுக்கும் மனிதாபிமான நடவடிக்கை பொதுமக்களுக்கு சேதமின்றி முன்னெடுக்கப்படுகிறது. இது உலக யுத்த வரலாற்றில் புதிய நடைமுறையாகும். இந்த செயற்பாட்டை கொழும்பிலுள்ள நட்சத்திர ஹோட்டல்களில் திருட்டுத்தனமாக தங்கியிருந்து வெளிநாட்டவர்கள் அவதானித்து வருகின்றனர்.
ரயில் துறை முன்னேற்றம்
1868ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரயில்வே துறை 145 வருடங்களை எட்டியுள்ளது கடந்த காலத்தை திரும்பிப் பார்க்கும் வகையில் இந்த நூதனசாலை அமைக்கப்பட்டுள்ளது.எந்த ஒரு அரசாங்கமும் முன்னுரிமை அளிக்காத அளவு ரயில்சேவையை நவீனமயப்படுத்த எமது அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. பெளதீக வளங்களை மேம்படுத்துவதோடு ரயில் சேவையையும் மேம்படுத்த வேண்டும். இதற்கு ரயில்வே ஊழியர்கள் கூடுதல் பங்களிக்க வேண்டும்.
பொதுப் போக்குவரத்து சேவையில் ரயில்வே துறைக்கு முக்கிய பங்குள்ளது. கடந்த காலங்களில் ரயில்வே துறை பாரிய முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த காலங்களில் சில பகுதிகளுக்கான ரயில் நேர அட்டவணைகளை மாற்ற முயன்ற போது எதிர்ப்பு ஏற்பட்டது. ஆனால் மாற்ற வேண்டியவற்றை மாற்றியாக வேண்டும்.
எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் மாற்ற வேண்டியதை மாற்றுவதற்கு எமது அரசு பின்நிற்காது.சில தரப்பினர் எதிர்த்த போதிலும் மத்திய பஸ் தரிப்பிடத்துக்கு அருகிலுள்ள நடைபாதைக் கடைகளை நாம் அகற்றினோம். இதன் மூலம் இலட்சக் கணக்கான பாத சாரிகள் நன்மை அடைகின்றனர். இங்கு நடைபாதைக் கடைகளை நிர்வகிப்பது பாதாள உலகத்தினரே. இவர்கள் நடை பாதை வியாபாரிகளிடம் மாதாந்தம் பணம் திரட்டி வருகின்றனர். சில பொலிஸார் கூட நடை பாதை வியாபாரிகளிடம் பணம் திரட்டி வருகின்றனர். மக்களின் நலனை கருத்திற்கொண்டே எமது அரசு முடிவுகளை எடுத்து வருகிறது. அரசியல் இலாபம் கருதி நாம் முடிவுகள் எடுப்பதில்லை.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply