மலையகத்துக்கும், முஸ்லிம்களுக்கும் தனியான அலகு: சர்வகட்சிக் குழுவிடம் யோசனைத் திட்டங்கள்
மலையகத் தமிழர்களுக்கும், வடக்கு, கிழக்கு முஸ்லிம்களுக்கும் தனியான அலகு வழங்கப்படவேண்டுமென மலையகக் கட்சிகளும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசும் கோரிக்கை விடுத்துள்ளன.
வடக்கு, கிழக்கு வாழ் முஸ்லிம்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டுமென்ற யோசனையடங்கிய திட்டவரைபொன்றை, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதிநிதி நிசார் காரியப்பர், சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தார்.
அதேநேரம், மலையகத் தமிழர்களுக்குத் தனியான அலகொன்றை வழங்கவேண்டுமெனக் கோரி இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் திங்கட்கிழமையும், மலையக மக்கள் முன்னணி செவ்வாய்க்கிழமையும் இருவேறு யோசனைத் திட்டங்களை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்தன.
மலையகத் தமிழர்கள் வாழ்ந்துவரும் மத்திய, ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாணசபைகளுக்கு அதிகாரப்பகிர்வுடன் கூடிய தனியான அலகொன்று வழங்கப்பட வேண்டுமென மலையக மக்கள் முன்னணி முன்வைத்திருக்கும் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலையகத் தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றக் கூடிய யோசனைத்திட்டமொன்றை 1994ஆம் ஆண்டு பாராளுமன்ற விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தோம். அந்த யோசனைத் திட்டம் மறுபடியும் 2006ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே தற்பொழுது மீண்டும் எமது யோசனைத் திட்டத்தை சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம்” என மலையக மக்கள் முன்னணியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கையிலுள்ள அனைத்து இனங்களினதும் அரசியல் அபிலாசைகளை நிவர்த்திசெய்யக் கூடிய நேர்மையான அதிகாரப் பகிர்வு, மலையகத் தமிழர்களுக்கெனத் தனியான அலகு உருவாக்கப்படவேண்டும், அதிகாரப் பகிவுத் திட்டத்துக்கு அமைய தேவையேற்படின் மாகாண சபைகளின் எல்லைகள் மீள வரையறுக்கப்பட வேண்டும் உள்ளிட்ட திட்டங்களை உள்ளடக்கியதாக மலையக மக்கள் முன்னணியின் யோசனைத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply