மீன்பிடியை தவிர்க்குமாறு மன்னார் மீனவர்களுக்கு எச்சரிக்கை!
மன்னார் கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடுவதனை தவிர்க்குமாறு மீனவர்களிடம் மன்னார் கடற்தொழில் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.மன்னார் கடற்பிராந்தியத்தில் எண்ணெய் வள ஆய்வு மேற்கொள்ளப்பட இருக்கின்ற நிலையிலேயே குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இலங்கையின் பல்வேறு கடற் பிரதேசங்களில் எண்ணெய் வள ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த 26ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இவ் ஆய்வு பணிகள் எதிர்வரும் 4ஆம் திகதி வரை மேற்கொள்ளப்படவுள்ளன.
குறிப்பாக காலி, களுத்துறை, கொழும்பு, நீர்கொழும்பு, சிலாபம், புத்தளம் மற்றும் மன்னார் ஆகிய கரையோர கடற்பரப்பில் இவ் எண்ணெய் வள ஆய்வு நடைபெற்று வருகின்றது.
குறித்த எண்ணெய் வள ஆய்வுக்காக நான்கு கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இக்காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட கரையோர பகுதிகளில் வசிக்கும் மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் பட்சத்தில் இவர்களின் மீன்பிடி உபகரணங்களுக்கு சேதம் ஏற்படும் வாய்ப்புக்கள் இருப்பதாகவும் எனவே பாதுகாப்பு கருதி மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மன்னார் கடற்தொழில் திணைக்களத்துக்கு கிடைக்கப்பெற்றுள்ள முக்கிய அறிவித்தலாக மன்னார் மீனவர்கள் மன்னார் வடக்கு தெற்கு கடற்பிராந்தியத்தில் எதிர்வரும் 2ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 7 மணி முதல் சனிக்கிழமை காலை 8 மணி வரை கரையிலிருந்து ஐந்து கடல் மைல் தூரத்துக்கு அப்பால் முற்றாக மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply