கிறிஸ்தவ பெண்ணின் மரண தண்டனை ரத்து – போராட்டக்காரர்களுக்கு பிரதமர் இம்ரான்கான் எச்சரிக்கை
பாகிஸ்தானில் லாகூர் புறநகர் பகுதியை சேர்ந்தவர் ஆசியா பீபி. அந்நாட்டின் சிறுபான்மையினத்தவரான கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த இவர், தனது அண்டை வீட்டாருடன் ஏற்பட்ட தகராறின்போது முகம்மது நபியை தரக்குறைவாக பேசியதாக மத அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டு வந்தார்.
இதில் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2010-ம் ஆண்டு விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை உறுதிப்படுத்தி லாகூர் உயர் நீதிமன்றம் கடந்த 2014-ம் ஆண்டில் தீர்ப்பளித்தது.
இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட ஆசியா பீபி, தனது மரண தண்டனையை ரத்து செய்யுமாறு பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல்மூறையீடு செய்திருந்தார். இந்த மனுமீது சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி மியான் சகிப் நிசார் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை நடத்தி வந்தது.
நேற்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த சுப்ரீம் கோர்ட் ஆசியா பீபிக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.
மரண தண்டனையில் இருந்து ஆசியா பீபியை விடுவித்து வெளியான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானின் இஸ்லாமாபாத், லாகூர், கராச்சி உள்ளிட்ட பெருநகரங்களிலும் நாட்டின் பிறபகுதிகளிலும் இஸ்லாமிய அமைப்புகளை சேர்ந்த பலர் போராட்டங்களிலும், ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மத அவமதிப்பு வழக்கில் விடுவிக்கப்பட்ட கிறிஸ்தவ பெண்ணுக்கு எதிராக போராடுபவர்களை, மாநில அரசுடன் மோத வேண்டாம் என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசுக்கு எதிரான நடவடிக்கையில் யாரும் ஈடுபட வேண்டாம். நீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டுமே அன்றி மீறக்கூடாது. இது விஷயமாக பொதுமக்களை தூண்டி விடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply