ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட்டை விலக்க வேண்டும்: கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

தமிழ் மக்கள் பேரவையில் இருந்தும், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் உருவாக்கப்பட்ட கட்சியிலிருந்தும் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளொட் ஆகிய கட்சிகள் வெளியேற்றப்பட வேண்டும். இந்த இரு கட்சிகளும் வெளியேற்றப்படாவிட்டால், தமிழ் மக்கள் நலன்சார்ந்த நிலைப்பாடுகளில் இறுக்கமாக இருக்க முடியாது என, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகால அரசியல் நிலமைகள் குறித்து நேற்று கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், இதனை நாங்கள் பேரவையின் இணைதலைவர்களுக்கு கடிதம் ஊடாக தெரியப்படுத்தியிருக்கின்றோம். அதற்கு பதில் கிடைக்கவில்லை. ஆனால் பேரவையின் இணை தலைவர் வைத்தியர் லக்ஷ்மன் கூட்டு என்பது கொள்கைரீதியான கூட்டாக இருக்கவேண்டும் என கூறியிருக்கின்றார். அது உண்மையாக இருந்தால் எங்கள் கோரிக்கையை பேரவை நிராகரிக்க இயலாது.

தமிழ் மக்கள் பேரவை ,இன்று தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையானதும், சக்தி மிக்கதுமான மக்கள் ,யக்கமாக மாற்றம் கண்டிருக்கின்றது. மேலும் அது தமிழ் மக்களுடைய நலன்சார் கொள்கைகளில் எந்த சந்தர்ப்பத்திலும், எந்த விட்டுக்கொடுப்புக்கும் இடமளிக்காத மிக இறுக்கமான நிலைப்பாட்டினை கொண்ட இயக்கமாகவும் காணப்படுகின்றது. அதேபோல், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் அவ்வாறூன நிலைப்பாட்டை கொண்ட ஒருவர்.

மறுபக்கம் முதலமைச்சருடைய கட்சியில் ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சி இருக்கின்றது. இந்த நிலையில் நாங்கள் கூறுவது தமிழ் மக்கள் பேரவையும், முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் தமிழ் மக்கள் நலன்சார்ந்த கொள்கையில் மிக இறுக்கமானவர்கள், விட்டுக்கொடுப்புக்கு இடமளிக்காதவர்கள் என மக்கள் நம்பும் ஒரு நிலையில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மற்றும் புளொட் ஆகிய இரு கட்சிகளும் அவ்வாறன நிலைப்பாட்டில் தொடர்ந்து நீடிப்பதற்கு இடமளிக்கமாட்டார்கள்.

முக்கியமான சந்தர்ப்பங்களில் இவர்கள் குழப்பங்களை உருவாக்குவார்கள் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply