கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசிடம் ரூ.15000 கோடி கேட்டோம் : பிரதமரை சந்தித்தபின் முதல்வர் பேட்டி

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட சேத விவரங்களை எடுத்துக் கூறி, மத்திய அரசு நிதி ஒதுக்கும்படி கேட்டுக்கொண்டார்.இந்த சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:-

தமிழகத்தில் கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் சேத விவரங்களை பிரதமரிடம் எடுத்துக் கூறி, புயல் நிவாரணமாக 15000 கோடி வழங்க வேண்டும் என கூறியிருக்கிறோம். இப்போது இடைக்கால நிவாரணமாக உடனடியாக 1500 கோடி ரூபாய் வழங்கும்படி கேட்டுக்கொண்டோம்.

மேலும் மத்திய குழுவை தமிழகத்திற்கு அனுப்பி வைத்து, சேத விவரங்களை உடனடியாக பார்வையிட்டு ஆய்வு செய்து விரைவில் நிதி ஒதுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம். உடனடியாக மத்திய குழுவை அனுப்புவதாக பிரதமர் கூறியிருக்கிறார்.

கஜா புயலால் 12 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் மழைக்கு இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் புயலால் சேதமடைந்த வீடுகள், பாதிக்கப்பட்ட விளைநிலங்கள், பயிர்கள், படகுகள் என சேத விவரங்களையும் முதல்வர் விளக்கமாக கூறினார். நிவாரண உதவிகள் குறித்த புள்ளி விவரங்களையும் அவர் வெளியிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply