நினைவஞ்சலி

சட்டத்தரணியும் மனித உரிமைகள் ஆர்வலரும் ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசகருமான செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தமிழ் பேசும் மக்களுக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் பாரபட்சமின்றி புரிந்த செல்வி மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் ஈழத்தின் அழிவு அரசியலின் கோரப்பசிக்கு இரையாகி ஒரு வருடம் கழிந்து விட்டது.

தமிழ் பேசும் சமூகத்திற்குள் சமூக சிந்தனையும் சுய ஆளுமையும் கொண்ட ஒரு சில பெண்களில் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களும் ஒருவர். தமிழர் பிரச்சினைக்கு நியாயமான தீர்வு காணப்பட வேண்டுமென்ற உந்துதலால் பொது வாழ்வுக்குள் காலடி வைத்தவர். மூன்று தசாப்த காலமாக மக்களின் துயர் தீர்க்கும் வாழ்வில் தம்மை அர்பணித்து வாழ்ந்தவர்.

தொடரும் யுத்தத்தைக் காரணம் காட்டி மக்களின் நாளாந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்க முடியாது என்பதை முதனிலைப்படுத்தி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்பட வேண்டிய பணியால் பல்வேறு அரசியல் சத்திகளுடனும் சமூக நிறுவனங்களுடனும் குறிப்பாக மனித உரிமை அமைப்புக்களுடனும் இணைந்து அவர் ஆற்றிய பங்களிப்புகள் மதிக்கத்தக்கவை. மக்களால் நினைவு கூரத்தக்கவை. மறக்கப்படமுடியாதவை.

துப்பாக்கிகளின் பாசிச அரசியலுக்கு அஞ்சாது துணிகரமாக செயலாற்றிய சமூகப்பற்றுள்ள மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமையானது தமிழ் தேசியம் எனக்கூறிக்கொள்ளும் வழிதவறிய அரசியலின் கோர முகத்தின் அடையாளமாக உள்ளது.

தமிழ் பேசும் மக்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பினை ஏற்படுத்திய இப்படுகொலைக்குக் காரணமானவர்கள் தமிழ் மக்கள் நலனில் உண்மையான அக்கறை உள்ளவர்களா? மகேஸ்வரியினைப் படுகொலை புரிந்தவர்கள் நமது சமூகத்தின் அவல நிலையை அலட்சியம் செய்து தமது காழ்ப்பு உணர்வுகளை கட்டுப்படுத்த முடியாமல் கொலைவெறியினை அரங்கேற்றுவதையே வீரமாக விடுதலையாக விளம்பரப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களுக்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்யும் அனைவரையும் கொலை செய்வதை, விடுதலையின் தாகம் என்பதனால்தான் இன்று வன்னி பெருநிலமெங்கும் சுடுகாடு மட்டுமே மிஞ்சியுள்ளது.

ஏன்றாவது ஒருநாள் எங்களின் ஒருவனது துப்பாக்கியே என்னை அமைதியாக்கிவிடும் என்று கூறியபடி துணிவுடன் நமது சமூகத்தின் அவலத்தை ஆவணப்படுத்திய மருத்துவத்துறை பேராசிரியை ரஜினி திரணகம அவர்களை பலியெடுத்த துப்பாக்கிகளே ஒருவருடத்திற்கு முன்னர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்களையும் பலியெடுத்துள்ளது. மக்களை நேசித்ததாலும் மக்களுக்காக அயராது பணி செய்ததாலுமே அவர் படுகொலை செய்யப்பட்டார். அவரது உன்னத பணிக்கு அவரது உயிரைப் பறித்தெடுத்தமை எவ்வளவு கொடுமையானது. தமிழ் பேசும் மக்களுக்கு தன்னால் இயன்ற மட்டும் இறுதி வரை சேவை செய்தவர் மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள்.

புலிகளின் தான்தோன்றித்தனமான போரானது எம்மினத்தை பெரிதும் பாதித்து வாழ்க்கையினை சிதைத்து அடிப்படை வசதிகளைக்கூட நிறைவு செய்ய முடியாமல் அல்லல் படும் சமூகமாக இன்று கொண்டு வந்து நிறுத்தியுள்ளது. தமிழர் தாயகமெங்கும் நிவாரணக்கிராமங்களையும் நலன்புரி நிலையங்களையும் உருவாக்கி அதில் கைம்பெண்களையும் அனாதைகளையும் ஊனமுற்றோரையும் விளைவுகளாக்கியுள்ளது.

இந்நிலையில் இறந்தும் இறவாது வாழ்பவர் என்பதற்கு உதாரணமாக இன்று ஈபிடிபி செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் மகேஸ்வரி அறக்கட்டளை நிதியமானது பாராளுமன்றத்தின் சட்ட அங்கீகாரத்தின் மூலம் உதயமாகியுள்ளது. மகேஸ்வரி வேலாயுதம் உயிருடன் இருந்தபோது ஆற்றிய பணிகளை மகேஸ்வரி அறக்கட்டளை நிதியம் தொடர்ந்தும் முழுமையாக மேற்கொள்ளும் என அதன் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஆம் மகேஸ்வரி வேலாயும் இறந்தும் இறவாமல் என்றும் வாழ்ந்துகொண்டிருக்கின்றார்.

– ஈழ மக்கள் ஜனநாயக கட்சி

மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரை


Both comments and pings are currently closed.

Comments are closed.