பசில் ராஜபக்ஷ தலைமையில் வடமாகாண அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணி

பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையிலான முழு அதிகாரங்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியொன்றை வட மாகாண அபிவிருத்தி, மீள்குடியேற்றம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை கையாள் வதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 33 (ஈ) பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை நடை முறைப்படுத்துவதற்கு ஏதுவாக இச்செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

19 பேர் கொண்ட இச்செயலணியின் தலைவராக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ எம்.பி நியமிக்கப்பட்டுள்ளதுடன் அதன் செயலாளராக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் எஸ்.பி. திவாரட்ண நியமிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய அமைச்சர்களின் செயலாளர்கள், பிரதான பாதுகாப்பு அதிகாரி, முப்படை தளபதிகள், பொலிஸ் மா அதிபர் மற்றும் ஆணைக்குழு, நிறுவனங்களின் முக்கியஸ்தர்களைக் கொண்டதாக இச்செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

மேற்படி ஜனாதிபதி செயலணியின் முதலாவது அமர்வு அதன் தலைவர் பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சு தலைமையகத்தில் நேற்று நடைபெற்றது.

ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள செயலணியினூடாக இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தல் புனர்வாழ்வளித்தல், வடமாகாண பொருளாதார, சமூக, உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது தொடர்பான திட்டங்களை வகுத்தல், அவற்றை செயற்படுத்துவதற்கான ஒருங்கிணைப்புகளை செய்தல்.

மேற்படி நடவடிக்கைகளுக்கு ஏதுவாக அரச பாதுகாப்பு பிரிவினரின் ஒத்துழைப்பை பெறுவதற்கான ஒருங்கிணைப்புகளை மேற்கொள்ளல்.

குறிப்பிட்ட மாகாண அதிகாரிகள், உட்பட சம்பந்தப் பட்ட நிறுவனங்கள் ஊடாக முன்னெடுக்கப்படும் திட்டங்களை கண்காணித்தல்.

முன்னெடுக்கப்படும் திட்டங்களுக்கு அரச தனியார், மற்றும் தனிப்பட்ட நபர்களின் சமூகத்தின் ஒத்துழைப்பை பெறுவதும், ஒருங்கிணைப்பை ஏற்படுத்துதலும்.

மேற்படி செயலணியின் உத்தியோகபூர்வ பணிப்புரைகளை, உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதில் ஏற்படும் சிக்கல்கள், தடைகளுக்கு உடனடி தீர்வு காணவும் உடனடியாக மாற்று வழிகளை கண்டறியும் விதத்தில் ஜனாதிபதி செயலணி செயற்படும்.

இதேவேளை செயலணியின் நடவடிக்கைகள், முன்னேற்றங்கள் குறித்து ஜனாதிபதிக்கு அவ்வப்போது அறியத்தர வேண்டும் என்றும் ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.

அத்துடன் மேற்படி செயலணியின் நடவடிக்கைகளின் போது உதவிகள் அல்லது சரியான தகவல்கள் கேட்கப் படும் பட்சத்தில் தவறாது சரியான தகவல்களையும் தாமதமின்றி வழங்க வேண்டு எனவும் சகல அரச ஊழியர் களுக்கும் இத்தால் அறிவிப்பதாகவும் ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

மேலும், எந்தவொரு அரச ஊழியரோ அல்லது எந்தவொரு அமைச்சிலோ, அரச திணைக்களமோ, அரச கூட்டுத்தாபனமோ, அல்லது இவ்வாறான நிறுவனங்களிலுள்ள ஊழியர் எவரோ நியமிக்கப்பட்ட செயலணியின் மூலம் வழங்கப்பட்ட கடமைகளையும் பொறுப்புக்களையும், தவறவிடுவாராயின், அவ்வாறு அவர் தவறவிட்ட சந்தர்ப்பங்களை உடனடியாக தமக்கு அறியத்தர வேண்டும் என்றும் செயலணிக்கு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அத்துடன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட செயலணிக்கு வழங்கப்பட்ட ஆணைக்கமைய செயற்பட்டு தனது செயற்பாடுகளை பூர்த்தி செய்த பின்பு ஒருவருட காலத்தினுள் தமக்கு அறிக்கையிடுமாறும் ஜனாதிபதி செயலர் குழுவுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply