தமிழ் மக்கள் மீது என் கூடுதல் கரிசனை’ தமிழ் சகோதரர்களின் நலன் பேணுவது எனது பொறுப்பு

தமிழ் மக்கள் மீது தான் கூடிய கரிசனை கொண்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெரிவித்துள்ளார்.

பிம்ஸ்டெக் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கைச் சந்தித்துப் பேசினார். இருதரப்பு உறவுகள் தொடர்பாக இருவரும் சுமார் ஒரு மணி நேரம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்தச் சந்திப்பின் போது, தமிழ்ச் சகோதரர்களைப் பாதுகாப்பது எனது தலையாய பொறுப்பு’ எனவும் தெரிவித்துள்ளார். இதேநேரம், புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பயங்கரவாதத்தை ஏனைய நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறாரெனவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் மன்மோகன் சிங்கிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தனது அரசாங்கம் எந்தநேரமும் தயாராக இருக்கிறதென தெரிவித்த ஜனாதிபதி, புலிகள் இயக்கம் ஆயுதங்களை கீழே வைத்தால் மட்டுமே இது சாத்தியமாகுமெனக் கூறினார்.

“பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து சகல சமூகங்க ளும் சமாதானத்துடன் வாழும் நிலையை உருவாக்கு வதே தனது முக்கிய இலக்காக இருக்கிறது” எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் மனிதாபிமான தேவைகளை முழுமையான அர்ப்பணிப்புடன் பூர்த்தி செய்வதற்கு தான் திடசங்கற்பம் பூண்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கிழக்கு மக்களை பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து நாம் விடுவித்ததைப் போன்று வடக்கு மக்களும் விடுவிக்கப்படுவர். பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம் திட்டமிட்டபடி தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமெனவும் ஜனாதிபதி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியப் பிரதமரைச் சந்தித்த பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசிய ஜனாதிபதி, தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் இலங்கை அரசு அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றது. கிழக்கு மாகாண இளைஞர்கள் பல வருடங்களாக புலிகளின் பிடியில் இருந்து இன்று ஜனநாயகத்தைத் தழுவியுள்ளார்கள். புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினராக இருந்த ஒருவர் இன்று எம்.பி.யாக இருக்கிறார் என்றார் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ.

இந்தக் கலந்துரையாடலின்போது, ஜனாதிபதி தனது விசேட பிரதிநிதியாக பசில் ராஜபக்ஷ எம். பியை டில்லிக்கு அனுப்பியதை பிரதமர் மன்மோகன் சிங் வரவேற்றார். அதேநேரம், பசில் ராஜபக்ஷவுடனான கலந்து ரையாடலின் போது, இலங்கையின் வடக்கு மக்களுக்கு உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை அனுப்புவதற்கு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுப்பதற்கு வழிவகைகள் காணப்பட்டதென பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.
வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, ஜனாதிபதியின் செயலாளர் லலித்வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் பிரசாத் காரியவசம் ஆகியோரும் ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply