சாகித்ய அகாடமி விருது பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் காலமானார்

புதுச்சேரியை சேர்ந்த பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன், நீண்ட காலமாக சென்னையில் வசித்து வந்தார். தற்போது, அவர் புதுச்சேரி லாசுப்பேட்டையில் வசித்து வருகிறார். சாகித்ய அகாடமி விருது பெற்ற அவர் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், நாவல்களை எழுதியுள்ளார்.

கடந்த ஓராண்டாக புற்றுநோயால் அவதிப்பட்டு வரும் அவர், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதுவை மாநிலம், மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு 2 மாதங்கள் சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவே, அவர் வீடு திரும்பினார். பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார்.

இந்த நிலையில் சில நாள்களுக்கு முன்பு அவரது உடல் நிலை பாதிப்படைந்தது. இதையடுத்து, மீண்டும் அவர் மதகடிப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் இன்று பிரபஞ்சன் காலமானார்.

100-க்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ள பிரபஞ்சன், தமிழக மற்றும் புதுவை அரசின் சிறந்த எழுத்தாளருக்கான விருதை பெற்றவர். ”வானம் வசப்படும்” என்ற நாவலுக்காக கடந்த 1995 ஆம் ஆண்டு அவர் சாகித்ய அகாடமி விருது பெற்றார்.

1945 ஏப்ரல் 27-ம் நாள் பிறந்த பிரபஞ்சன் 1961-ம் ஆண்டு எழுதத் தொடங்கினார். 2017-ம் ஆண்டு அவரின் எழுத்துப்பணி 55-ம் ஆண்டை கடந்து உள்ளது. பிரபஞ்சனின் படைப்புகள் ஆங்கிலம், இந்தி, தெலுங்கு, கன்னடம், ஜெர்மன், பிரஞ்சு மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply