எச்.ஐ.வி. பாதித்த கர்ப்பிணியிடம் சுகாதார செயலாளர் நேரில் விசாரணை
விருதுநகர் மாவட்டம் சாத்தூரைச் சேர்ந்த ஆட்டோ டிரைவரின் 24 வயதான மனைவி தற்போது கர்ப்பிணியாக உள்ளார். உடல்நலக்குறைவின் காரணமாக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இவருக்கு, கடந்த 3-ந்தேதி ரத்தம் செலுத்தப்பட்டது. அந்த ரத்தம் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டுவரப்பட்டது என்பதும், அதில் எச்.ஐ.வி. கிருமி கலந்து இருப்பதும் தெரியவந்து உள்ளது. இது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இதனால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்க கோரியும், பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் விருதுநகரில் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஜனநாயக வாலிப சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் உறவினர்களும் அங்கு போராட்டம் நடத்தினார்கள்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சாத்தூர் அரசு ஆஸ்பத்திரி முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
இதற்கிடையே பாதிக்கப்பட்ட கர்ப்பிணி நேற்று விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜனை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தனக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்த காரணமான டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். பின்னர் அந்த கர்ப்பிணியும், அவருடைய கணவரும் கலெக்டர் அலுவலகம் வந்து மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமாரிடமும், சாத்தூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தனர்.
கர்ப்பிணிக்கு ரத்தம் செலுத்திய தினத்தன்று சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் பணியில் இருந்த டாக்டர், செவிலியர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரியின் ரத்த வங்கி பணியாளர் ஆகிய 3 பேர் மீது போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று விருதுநகர் சென்று அங்குள்ள கலெக்டர் அலுவலத்தில் அந்த கர்ப்பிணியையும், அவரது கணவரையும் நேரில் சந்தித்து விசாரித்து ஆறுதல் கூறினார்.
அப்போது அந்த பெண்ணிடம், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்ததுடன், அவருக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தரமான சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்தார்.
பின்னர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி தொற்றுடன் இருந்த ரத்தம் செலுத்தப்பட்டது துரதிர்ஷ்டவசமானது. இதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. மாநிலம் முழுவதும் 574 ரத்த இருப்பு மையங்களும், 284 ரத்த வங்கிகளும் உள்ளன. அங்கெல்லாம் இதுபோன்ற சம்பவம் நடந்ததே இல்லை. இது தவறுதலாக நடந்துவிட்டது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்டதும் வேதனை அடைந்த முதல்-அமைச்சர் என்னை அழைத்து, நேரில் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நவீன சிகிச்சை அளிக்க உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு உத்தரவிட்டார். இதுகுறித்து விசாரணை நடத்தி தவறு செய்த ஊழியர்கள், அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டு உள்ளார்.
அதன்பேரில் நான் இங்கு வந்து, அந்த பெண்ணையும், அவரது கணவரையும் சந்தித்து ஆறுதல் கூறினேன். சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தேன்.
அந்த பெண்ணின் கணவர், ‘என் மனைவிக்கு ஏற்பட்டது போல வேறு யாருக்கும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். என் மனைவிக்கும், குழந்தைக்கும் தனியார் ஆஸ்பத்திரியில் நவீன சிகிச்சை அளிக்க வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டார்.
இதையடுத்து அவர்களின் உறவினர்கள், வக்கீலுடன் பேசி, உடனடியாக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தனி வார்டில் வைத்து சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்வதாக கூறினேன். அங்கு அளிக்கப்படும் சிகிச்சை திருப்தி அளிக்கவில்லை என்றால் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறி உள்ளேன். இதை அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
கர்ப்பிணிக்கு ஏற்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்காக உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்து உள்ள 4 வகையான மாத்திரைகள் வழங்கவும், அவருக்கு பிறக்கப்போகும் குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் வராத வகையில் வேலூர் சி.எம்.சி. ஆஸ்பத்திரி நிபுணர் களிடம் ஆலோசனை கேட்டு, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
விருதுநகர் மாவட்டத்தில் 2 தனியார் ரத்த சேமிப்பு வங்கிகளும், 2 அரசு ரத்த சேமிப்பு வங்கிகளும், 7 ரத்த இருப்பு மையங்களும் உள்ளன. அங்கு சேமிக்கப்பட்டுள்ள அனைத்து வகை ரத்தத்தையும் உடனடியாக மறுபரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்காக மருத்துவ நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள்.
சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள ரத்த வங்கிக்கு ரத்த தானம் செய்ய வந்த வாலிபரிடம், அவரது ரத்தத்தை பரிசோதனை செய்யாமல் ரத்ததானம் பெற்றுள்ளது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது. விதிகளை பின்பற்றி, ரத்த மாதிரியை பரிசோதிக்காத பரிசோதனை கூடத்தின் தொழில்நுட்ப ஊழியர் வளர்மதி நிரந்தர பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
இதேபோல கடந்த 2016-ம் ஆண்டு அந்த வாலிபர் ரத்தம்தானம் செய்தபோது, அவருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது தெரிந்தும், முறையாக பதிவு செய்யாமலும், வாலிபருக்கு உரிய ஆலோசனைகளை வழங்கவும் தவறிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுக்குழு ஊழியர்கள் ரமேஷ், ஆலோசகர் கணேசன் ஆகியோரும் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து மேலும் விசாரிக்க தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் திட்ட இயக்குனர் மற்றும் உறுப்பினர்-செயலாளர் டாக்டர் கி.செந்தில்ராஜ் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும். இதில் வேறு அலுவலர்கள், அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஆஸ்பத்திரிகளுக்கு ரத்த சேமிப்பு வங்கியில் இருந்து ரத்தம் கொடுக்கப்பட்ட உடன், அந்த ரத்த வகை நோயாளியின் ரத்தத்துடன் ஒத்துப்போகிறதா என்று மட்டும் பார்க்கப்படும். இனி அரசு ஆஸ்பத்திரிகளில், ரத்தம் செலுத்தும் முன் அந்த ரத்தத்தில் நோய் தொற்று இருக்கிறதா? என்பதை கண்டறியவும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும்.
தவறுக்கு காரணமான டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்ப்பிணியும், அவரது கணவரும் போலீஸ் சூப்பிரண்டுவிடம் புகார் கொடுத்து உள்ளனர். அதில், இந்த தவறுக்கு பொறுப்பானவர்கள் யார்? என்ற விவரம் இல்லை. இதனால் விசாரணை அறிக்கை வந்தபின், அதன் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
உயர்மட்ட குழு விசாரணையின் அடிப்படையில், தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே தமிழக மனித உரிமை ஆணைய நீதிபதி ஜெயச்சந்திரன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் உள்ள குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், கர்ப்பிணிக்கு எச்.ஐ.வி. கிருமி கலந்த ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக, மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்காக எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு நிச்சயம் தண்டனை பெற்றுத்தரும் என்றும், பாதிக்கப்பட்ட நபருக்கு போதிய அளவு இழப்பீடு பெற்றுத்தரப்படும் என்றும் கூறினார்.
அரசு மற்றும் தனியார் ரத்த வங்கிகளில் தவறு நடப்பது ஏன்? எந்தெந்த இடங்களில் தவறு நடைபெறுகிறது? என்பதை கண்காணித்து பொது சுகாதாரத்துறை செயலர் அறிக்கை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் நடவடிக்கை எடுக்கவும் அரசுக்கு பரிந்துரை செய்யப்படும் என்றும் அப்போது அவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply