டிரம்ப் பிடிவாதம்- அமெரிக்காவில் அரசுத் துறைகள் முடக்கம் நீடிக்கிறது

அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவில் சட்ட விரோதமாக யாரும் நுழையாதபடிக்கு அமெரிக்க–மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்புவேன் என்று 2016–ம் ஆண்டு தேர்தலின் போது டிரம்ப் வாக்குறுதி அளித்தார்.

அதன்படி எல்லையில் சுவர் எழுப்ப மெக்சிகோவிடம் டிரம்ப் நிதி கேட்டார். ஆனால் அந்த நாடு தர மறுத்துவிட்டதால் உள்நாட்டு நிதியை பயன்படுத்த வேண்டிய நெருக்கடி உருவானது. இதற்காக உள்நாட்டு நிதி 5 பில்லியன் டாலர் (சுமார் ரூ.35 ஆயிரம் கோடி) வழங்க வேண்டும் என்று, அமெரிக்க பாராளுமன்றத்தை டிரம்ப் வலியுறுத்தி வருகிறார்.

ஆனால் மெக்சிகோ எல்லைச்சுவருக்காக நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாது என்றும், அந்த திட்டத்தையே ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறும் ஜனநாயக கட்சி, செலவின மசோதாவை நிறைவேற்ற ஆதரவு அளிக்க மறுத்து விட்டது. இதன் காரணமாக வெளியுறவு, உள்நாட்டு பாதுகாப்பு, போக்குவரத்து, விவசாயம், நீதித்துறை உள்ளிட்ட 9 துறைகள் முடங்கின.

இந்த நிலையில் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து நேற்று முன்தினம் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபை கூடியது. இதில் பெரும்பாலான உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை. இருந்தபோதிலும் உறுப்பினர்களின் கூட்டத்தில் அரசு துறைகள் முடங்கியதை சரி செய்வதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. மேலும் இரு சபைகளும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டு உள்ளன. இதனால் அரசு துறைகளின் முடக்கம் தொடர்ந்து நீடிக்கிறது.

அதே சமயம் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்புவேன் என்கிற தனது முடிவில் டிரம்ப் விடாப்பிடியாக உள்ளார். இதனால் அரசு துறைகளின் செயலிழப்பு புத்தாண்டு வரை தொடரும் நிலை உருவாகி உள்ளது.

இந்த குழப்பமான சூழலால் அரசு ஊழியர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் கட்டாய விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என்பது தெரியவில்லை.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply