உலகத்திலேயே இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அதிக அளவில் ஊழல்கள் : மந்திரி அதிர்ச்சி தகவல்

இலங்கை கிரிக்கெட் வாரியம் சமீபகாலமாகவே சூதாட்டத்தில் சிக்கி தவித்து வருகிறது. 2017 ‘லீக்’ ஒன்றில் இலங்கை முன்னாள் வேகப்பந்து வீரர் தில்காரா லோகுட்டிகே ஊழல் குற்றச்சாட்டில் நீக்கப்பட்டார்.

அதை தொடர்ந்து முன்னாள் கேப்டனும், முன்னாள் தேர்வு குழு தலைவருமான ஜெயசூர்யா ஊழல் புகார் தொடர்பான விசாரணைக்கு ஒத்துழைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. முன்னாள் வேகப்பந்து வீரர் நுவன் சொயகா மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டில் தடை விதிக்கப்பட்டார்.

ஐ.சி.சி. (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) ஊழல் தடுப்பு அமைப்பு இலங்கை கிரிக்கெட் வாரியத்தை தொடர்ந்து விசாரித்து வருகிறது.

இந்த நிலையில் உலகிலேயே இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் அதிக அளவில் ஊழல்கள் மலிந்த கிரிக்கெட் வாரியம் என்று இலங்கை விளையாட்டுத்துறை மந்திரி ஹரின் பெர்னாண்டோ அதிர்ச்சிகரமான தகவலை வெளியீட்டு உள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

கிரிக்கெட் ஊழலில் இலங்கை கிரிக்கெட் வாரியம் தான் மிகமிக மோசமாக திகழ்கிறது என்று ஐ.சி.சி. மதிப்பிட்டுள்ளது. இது துரதிருஷ்டவசமானது .

சூதாட்ட தரகர்களுடன் இருக்கும் தொடர்பு மட்டும் பிரச்சினை அல்ல. உள்ளூர் போட்டிகளில் கூட நிழல் உலகத்துடன் தொடர்பு இருப்பதாக ஐ.சி.சி. தெரிவித்தது. தவறு செய்தவர்கள் விவரங்களை தெரிவித்து ஒப்புக்கொண்டால் ஐ.சி.சி. வீரர்களை மன்னிக்க தயாராக இருக்கிறது.

மேட்ச் பிக்சிங்குக்கு எதிராக சட்டம் இயற்ற அரசு விரும்புகிறது.

இவ்வாறு பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply