சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் உடனடி வாபஸ் இல்லை : டிரம்ப் ஆலோசகர் திட்டவட்டம்

சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளை ஒடுக்குவதற்காக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அமெரிக்க ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் 19-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், சிரியாவில் இருந்து தனது நாட்டு படைகள் வெளியேறும் என்று அறிவித்தார். இது சிரியாவின் வடகிழக்கு பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக அமெரிக்க படைகளுடன் இணைந்து சண்டையிட்டு வரும் குர்து போராளிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், டிரம்ப் நிர்வாகம் நேற்று முன்தினம் துருக்கி அரசுடன் ஒரு புதிய ஒப்பந்தம் செய்து கொண்டது. அதில் ‘சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தினரை தோற்கடிக்கும் வரை அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்படமாட்டாது. அதேபோல் குர்து போராளிகளின் பாதுகாப்பையும் துருக்கி அரசு உறுதி செய்யவேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

இந்த தகவலை நிருபர்களிடம் தெரிவித்த அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், “சிரியாவில் இருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறுவதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை. ஐ.எஸ். பயங்கரவாதிகள் தோற்கடிக்கப்படும் வரை சிரியாவில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறாது என்று டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்து இருக்கிறார்” என்று குறிப்பிட்டார்.

துருக்கி அரசு குர்து போராளிகளை தனது நாட்டில் பயங்கரவாத இயக்கமாக அறிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply