தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கி நாடு துண்டாடப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வொன்றைப் பெற்றுக் கொடுத்து தாய் நாடு துண்டாடப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளதென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தானில் இலங்கையர் மத்தியில் உரையாற்றுகையில் தெரிவித்துள்ளார். புலிகளின் பிடியிலுள்ள எஞ்சிய பொது மக்களையும் எதிர்வரும் 48 மணித்தியாலத்திற்குள் எமது வீரமிக்க படை வீரர்கள் மீட்டெடுப்பார்கள் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

புலிகளின் பிடியில் அகப்பட்டிருந்த சுமார் இரண்டு இலட்சம் தமிழ் மக்கள் அரசாங்கத்தின் பாதுகாப்பை நாடி வந்துள்ளனர். அவர்களுக்கான பாதுகாப்பு, குடியிருப்பு உட்பட சகல வசதிகளையும் அரசாங்கம் பெற்றுக் கொடுத்துள்ளது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜோர்தானுக்காக உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஜோர்தா னில் வாழும் இலங்கையர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளனர். இந்நிகழ்வு ஜோர்தான் கைத்தொழில் பேட்டையில் கெஸவல்வெயா ஆடைத் தொழிற்சாலை முன்றலில் இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தமதுரையில் மேலும் தெரிவித்ததாவது:-

உலக பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையிலும் எமது பொருளாதாரத்தை குறிப்பிடத்தக்க அளவில் பேண முடிந்துள்ளது. வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ள குடும்பங்களில் நிலவும் பிரச்சினைகள் அதிகம். இவற்றுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க வேண்டியுள்ளது. இந்நிலையிலும் வெளிநாட்டில் வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் வழங்கும் அன்னிய செலாவணி எமக்குப் பங்களிப்பாகவுள்ளது. அதற்காக அரசாங்கம் நன்றி தெரிவிக்கிறது.

வெளிநாட்டிலுள்ள இலங்கையர் தற்போதைய வடக்கின் நிலமைபற்றி அறிய ஆவலாயுள்ளதை நான் அறிவேன். நாம் 2005ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியடைந்த போது அந்த வெற்றியை அனுபவிக்க முடியாமல் நிராயுதபாணிகளான படை வீரர்களை புலிகள் கொன்று குவித்தனர்.

அப்போதும் நாம் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானமான தீர்வொன்றைப் பெற்றுக்கொடுக்க முயற்சித்தோம். ஜெனிவாவிலும் ஒஸ்லோவிலும் பேச்சு நடத்தினோம். எனினும் புலிகள் அவற்றைச் சீர்குலைத்தனர். மாவிலாறில் விவசாயிகளுக்கு நீர் வழங்குவதைத் தடுத்த போதே நாம் மனிதாபிமான நடவடிக்கையை ஆரம்பிக்க நேர்ந்தது.

இன்று வடக்கில் புலிகளை ஒரு சிறு பகுதிக்குள் எமது படையினர் முடக்கியுள்ளனர். பயங்கரவாதத்தை ஒழிக்க எமது படையினர் புரியும் தியாகம் சகல மக்களினதும் கெளரவத்திற்கு உரியது. திறமையான எமது படையினர், முப்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் இவர்களின் ஆளுமையால்தான் இன்று நாம் பல வெற்றிகளை ஈட்ட முடிந்துள்ளது. அதேபோன்று பாதுகாப்புச் செயலாளரின் அர்ப்பணிப்பும் இதில் குறிப்பிடத்தக்கது.

நாட்டில் யுத்தம் இடம்பெறுகின்ற போதும் பாரிய அபிவிருத்திகளுக்கான நடவடிக்கைகளையும் நாம் மேற்கெண்டுள்ளோம். கொழும்பு, காலி, அம்பாந்தோட்டை, ஒலுவில் மற்றும் காங்கேசன்துறை துறைமுக நிர்மாணங்கள் இடம்பெற்று வருகின்றன. முதல் தடவையாக நாம் அம்பாந்தோட்டையில் விமான நிலையமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பாரிய மின் உற்பத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

சில வெளிநாடுகள் எமக்குப் பல அழுத்தங்களைப் பிரயோகிக்கின்ற போதும் எமது மக்களின் சக்தியால் நாம் அதற்கு அடிபணியாது கெளரவ மாக வாழும் சூழலை உருவாக்க முடிகின்றது.

வெளிநாடுகளில் பணிபுரியும் எமது தூதுவர்கள் எமது நாட்டின் கீர்த்தியைப் பாதுகாக்க வேண்டும். இதற்கான பொறுப்பு அவர்களுக்குண்டு. அந்த நம்பிக்கை எமக்குண்டு எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply