2021-ம் ஆண்டு மனிதர்களை விண்ணுக்கு அனுப்ப ஏற்பாடு: இஸ்ரோ தலைவர் சிவன்
இந்திய விண்வெளி ஆய்வு மைய (‘இஸ்ரோ’) தலைவர் சிவன் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2018-ம் ஆண்டு 17 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இதில் ஒரு திட்டம் தோல்வியில் முடிந்தது. மற்ற திட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன. இதில் 7 செயற்கைகோள்கள் மற்றும் 9 ராக்கெட்டுகள் அடங்கும். ‘உன்னதி’ திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம். இதில் 45 நாடுகள் பங்கேற்கின்றன.
இதில் நானோ செயற்கைகோளை உருவாக்குவது குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த திட்டத்தை வருகிற 17-ந் தேதி மத்திய மந்திரி தொடங்கி வைக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடிக்கு விண்வெளி திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு ரூ.10 ஆயிரம் கோடி, பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டு தயாரிப்புக்கு ரூ.10 ஆயிரம் கோடி, புதிய செயற்கைகோள்களை உருவாக்க ரூ.10 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த ரூ.30 ஆயிரம் கோடி 2 ஆண்டுகளுக்கான திட்ட பணிகளுக்கு செலவு செய்யப்படும். இதன் மூலம் புதிதாக 20 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். விண்வெளி திட்டங்களில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு ஏற்கப்படும். இந்த ககன்யான் திட்டத்திற்காக இஸ்ரோவில் மிகப்பெரிய அளவில் விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகின்றன.
ககன்யான் திட்டத்தில் மனிதர்களை விண்ணுக்கு அனுப்பி மீண்டும் அவர்களை பத்திரமாக பூமிக்கு கொண்டு வருவது தான் மிக முக்கியமான விஷயம் ஆகும். இதில் 2 விஷயங்கள் உள்ளன. அதாவது ஒன்று என்ஜினீயரிங் மற்றும் மற்றொன்று மனிதர்கள் ஆகும்.
மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது என்பது ‘இஸ்ரோ’ வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தும் திட்டம் ஆகும். இந்த திட்டத்திற்கு என்றே மனித விண்வெளி அறிவியல் மையத்தை அமைத்துள்ளோம்.
இதற்காக அட்டின் என்பவரை இயக்குனராக நியமித்துள்ளோம். ககன்யான் திட்ட பணிகள் முழுவதையும் அந்த மையமே பார்த்துக்கொள்ளும். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன்பு, சோதனைக்காக ஆளில்லாத விண்கலம் 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதமும், 2021-ம் ஆண்டு ஜூலை மாதமும் விண்ணுக்கு ஏவப்படும்.
இந்த சோதனையின்போது அதில் ஏதாவது குறைகள், பிரச்சினைகள் இருப்பது தெரியவந்தால், அதை சரிசெய்வோம். கடைசியாக 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மனிதர்கள் விண்ணுக்கு அனுப்பப்படுவார்கள். இந்த திட்ட இலக்கை அடைய முழுவீச்சில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
நடப்பு ஆண்டில் ககன்யான் திட்டத்திற்கு தான் அதிகப்படியான முன்னுரிமை அளிக்கிறோம். மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் முன், இந்தியாவில் ஆரம்பகட்ட பயிற்சி வழங்குகிறோம். அதன் பிறகு நவீன பயிற்சிகள் வெளிநாட்டில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஷியாவில் வழங்கப்படலாம்.
விண்கலத்தில் இந்தியர்கள் தான் அனுப்பப்படுவார்கள். விண்ணுக்கு பெண்களை அனுப்பவும் நாங்கள் விரும்புகிறோம். விண்ணுக்கு அனுப்பப்படும் விண்வெளி வீரர்கள் இந்தியாவால் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணியில் வெளிநாட்டு நிறுவனங்களை ஈடுபடுத்தமாட்டோம்.
இறுதிக்கட்ட பணிகளில் வெளிநாட்டு நிறுவனங்கள் ஈடுபடுத்தப்படலாம். விண்ணுக்கு செல்லும் மனிதர்கள் 7 நாட்கள் அங்கு தங்கி இருந்து ஆய்வு பணிகளை மேற்கொள்வார்கள். அவர்களுக்கு பல்வேறு கட்ட பயிற்சிகள் வழங்கப்படும்.
இவ்வாறு ‘இஸ்ரோ’ தலைவர் சிவன் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply