அரசியலமைப்புக்கான வரைபைத் தயாரிக்க முடியாத அரசியலமைப்பு சபை தொடர்ந்தும் செயற்படுவதால் எந்தவித பயனும் இல்லை:அநுரகுமார திசாநாயக்க
பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு, வழிநடத்தல் குழு அமைக்கப்பட்டு மூன்று வருடங்களாகியுள்ளபோதும் இதுவரை அரசியலமைப்பு வரைபைக் கூட தயாரிக்க முடியவில்லை. கட்சிகளுக்கிடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தி அரசியலமைப்பு வரைபை தயாரிக்க முடியாத அரசியலமைப்பு சபையும், வழிநடத்தல் குழுவும் தொடர்ந்து செயற்படுவது காலத்தை வீணடிப்பதாகவே அமையும் என ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க குற்றஞ்சாட்டினார்.
அரசியலமைப்பு வரைபை தயாரிப்பதற்கான பூர்வாங்க நடவடிக்கைகள் கூட ஆரம்பிக்கப்படாத நிலையில் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடன் இருப்பவர்களும் பௌத்த விகாரைகளுக்குச் சென்று நாட்டை பிளவுபடுத்தும் அரசியலமைப்பு வரைபு ஏப்ரல் மாதம் முன்வைக்கப்படவுள்ளது. இதனூடாக ஒன்பது பொலிஸ் பிரிவுகள் உருவாகப்போகின்றன என பொய்யுரைத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பிரதி சபாநாயகர் தலைமையில் நேற்றுக் கூடிய அரசியலமைப்பு சபையில் உரையாற்றும்போதே அநுரகுமார திசாநாயக்க இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய அவர், நேற்றையதினம் பௌத்த விகாரைக்குச் சென்றிருந்த மஹிந்த ராஜபக்ஷ, மத வழிபாடுகளை முடித்துவிட்டு நாடு பிளவுபடும் அரசியலமைப்பு வரைபு ஏப்ரல் மாதம் கொண்டுவரப்படப்போகிறது. இதனூடாக பெடரல் அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு, நாட்டில் ஒன்பது வேறுபட்ட பொலிஸ் உருவாக்கப்படப்போகிறது என அப்பட்டமான பொய் கூறினார். பௌத்த விகாரைகளுக்குச் சென்று பொய் கூறும் அரசியல் தலைவர்களே தற்பொழுது உருவாகியுள்ளனர்.
அரசியல் ரீதியாக வங்குரோத்து நிலையை அடைந்து, சதித் திட்டம் தோல்வியடைந்த நிலையில் இனவாதத்தை கையிலெடுத்த மக்கள் மத்தியில் பொய்யுரைத்து அவர்களைக் குழப்பி வருகின்றனர். அரசியலமைப்பு சபையினாலோ அல்லது வழிநடத்தல் குழுவினாலோ அரசியலமைப்பு வரைபை கடந்த மூன்று வருடங்களில் தயாரிக்க முடியாது போனது. இவ்வாறான நிலையில் அரசியலமைப்பு என்றால் என்ன என்பதை ராஜபக்ஷ தன்னுடன் இருக்கும் உறுப்பினர்களுக்கு செயலமர்வொன்றை நடத்த வேண்டும்.
ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் நாட்டைப் பிளவுபடுத்தம் அரசியலமைப்பு கொண்டுவரப்படப் போகிறது என்பது அப்பட்டமான பொய். வழிநடத்தல் குழுவினால் தயாரிக்கப்படும் அரசியலமைப்பு வரைபு அரசியலமைப்பு சபைக்கு சமர்ப்பிக்கப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்படாவிட்டால் அத்துடன் அரசியலமைப்பு சபை, வழிநடத்தல் குழு மற்றும் அரசியலமைப்பு தயாரிக்கும் செயற்பாடுகள் யாவும் முடிவடைந்துவிடும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு வரைபு நிறைவேற்றப்பட்டால் அது அமைச்சரவைக்கு அனுப்பப்பட்டு அங்கு அங்கீகரிக்கப்பட வேண்டும். அமைச்சரவையின் அனுமதியைப் பெற்று வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும். அது மாகாண சபைகளின் கருத்துக்களுக்காக அனுப்பப்பட்டு அதன் பின்னரே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அரசியலமைப்பு வரைபு பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். அவ்வாறு நிறைவேற்றப்பட்டாலும் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படுவது அவசியம். சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட்டாலும் அதில் ஜனாதிபதி கையொப்பம் இட்டாலே அரசியலமைப்பு ஏற்றுக் கொள்ளப்படும். இதில் எந்தவொரு செயற்பாடும் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை.
முழு பாராளுமன்றம் அரசியலமைப்பு சபையாக மாற்றப்பட்டு மூன்று வருடங்கள் கடந்துள்ளது. வழிநடத்தல் குழு 83 தடவைகள் கூடியுள்ளது. இதுவரை அரசியலமைப்புக்கான வரைபொன்றை அவர்களால் தயாரிக்க முடியாது போயுள்ளது. அரசியலமைப்புக்கான வரைபைக் கூட அவர்களால் தயாரிக்க முடியாத நிலையில் எப்படி ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் அரசியலமைப்பை முன்வைக்க முடியும்?
ஒரு வருடத்துக்குள் அரசியலமைப்பை தயாரிக்கக் கூடியதாக இருக்கின்றபோதும், வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடந்த மூன்று வருடங்களாக காலத்தை இழுத்தடிப்பதாகவே தெரிகிறது.
அரசியலமைப்புக்கான வரைபை தயாரிக்க முடியாத அரசியலமைப்பு சபை மற்றும் வழிநடத்தல் குழு தொடர்ந்தும் செயற்படுவதால் எந்தவித பயனும் இல்லை.
இது காலத்தை வீணடிக்கும் செயற்பாடாகவே அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply