டிரம்ப் – கிம் ஜாங் அன் வியட்நாமில் சந்தித்து பேச அமெரிக்கா விருப்பம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. குறிப்பாக அமெரிக்கா வடகொரியாவை நேரடியாக எதிர்த்தது. அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன் இடையே வார்த்தை யுத்தம் நடந்தது. இருநாடுகளின் மோதல் போக்கு சர்வதேச நாடுகளுக்கு கவலை அளிப்பதாக அமைந்தது. இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜாங் அன் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது.
அதன் படி கடந்த ஆண்டு ஜூன் 12-ந்தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருநாட்டு தலைவர்களும் சந்தித்து பேசினர். உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த பேச்சுவார்த்தையின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜாங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.
எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது.
புத்தாண்டையொட்டி வடகொரிய மக்களிடையே உரையாற்றிய கிம் ஜாங் அன், ஒட்டுமொத்த உலகத்தின் முன்னிலையில் அளித்த வாக்குறுதிகளை அமெரிக்கா காப்பாற்றத் தவறினால் வடகொரியா புதிய நடவடிக்கைகளை கையாளும் என எச்சரிக்கை விடுத்தார்.
அதே சமயம் சர்வதேச சமூகம் வரவேற்கும் வகையில், எதிர்காலத்தில் எந்த நேரத்திலும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் அமர்ந்து பேச்சு வார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கிம் ஜாங் அன் அறிவித்தார்.
அதே போல் டிரம்பும், கிம் ஜாங் அன்னை சந்திக்க தான் ஆவலுடன் இருப்பதாகவும், இந்த சந்திப்பு விரைவில் நடக்கும் என்றும் தெரிவித்தார்.
அதன் படி இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசும் 2-வது உச்சி மாநாட்டை எங்கு? எப்போது? நடத்துவது என்பது குறித்து அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றனர். அந்த வகையில் டிரம்ப்-கிம் ஜாங் அன் சந்திப்பு தாய்லாந்து அல்லது வியட்நாமில் நடக்கலாம் என தகவல்கள் வெளியாகின.
அந்த இருநாட்டு அரசுகளும் இந்த சந்திப்புக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும், தங்கள் தரப்பில் செய்ய வேண்டிய நடவடிக்கைகளை செய்துதர தயாராக இருப்பதாகவும் உறுதி அளித்தன. அதன் படி அமெரிக்க வெள்ளை மாளிகையின் ஆய்வு குழு தாய்லாந்தின் பாங்காங் மற்றும் வியட்நாமின் ஹனோய் நகரங்களுக்கு சென்று ஆய்வு நடத்தின.
வடகொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள் வியட்நாமின் ஹனோய் நகரில் பலமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக தென் கொரிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த நிலையில் வியட்நாமில் அடுத்த மாதம் (பிப்ரவரி) மத்தியில் இருநாட்டு தலைவர்களின் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யா வடகொரியாவுக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளதாக புதிய தகவல் கிடைத்திருக்கிறது. ஜப்பானில் வெளிவரும் தினசரி நாளிதழ் ஒன்றில் இது பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது.
வியட்நாமில் உச்சி மாநட்டை நடத்தலாம் என்கிற அமெரிக்காவின் திட்டம் குறித்து வடகொரியா தீவிர ஆலோசனை நடத்தி வருவதாகவும் அந்த நாளிதழில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் இது பற்றி அமெரிக்கா மற்றும் வடகொரியா தரப்பில் எந்த வித விளக்கமும் அளிக்கப்படவில்லை.
இதற்கிடையே, பாதுகாப்பு காரணங்களையொட்டி ஹனோய் நகரத்துக்கு பதிலாக டா நாங் நகரில் இந்த சந்திப்பை நடத்திட வியட்நாம் விரும்புவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply