ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் அவரது சகோதரர் கருத்து

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்தின் செயற்பாட்டினால், நாட்டின் பொருளாதாரம் பாரிய அழிவுப்பாதையில் பயணித்துக்கொண்டிருப்பதாக ஜனாதிபதியின் சகோதரரான டட்லி சிறிசேன தெரிவித்துள்ளார். பொலன்னறுவையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பொங்கல் நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர், “நாட்டில் 30 வருடங்களாக யுத்தம் இடம்பெற்றது. இதனால் நாம் அனைவரும் அச்சத்துடனே அன்று வாழ்ந்தோம். தற்பொழுது அந்த நிலைமை இல்லை.

எனவே, இனரீதியாக நாம் ஐக்கியப்பட வேண்டும். இந்த ஐக்கியத்தை சீர்குலைத்து, இனவாதத்தை தூண்டும் எந்தவொரு அரசியல்வாதிக்கும் நாம் ஆதரவளிக்கக்கூடாது.

நாட்டில் இன்று பொருளாதாரத்துக்கு சிக்கல் நிலைமையொன்று ஏற்பட்டுள்ளது.

அரசியல் அதிகாரம் மற்றும் பணத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட தூரநோக்கற்ற அரசியல்வாதிகள் கடந்த 70 வருடங்களாக நாட்டை ஆட்சி செய்தமையின் பலனாகவே நாம் இவ்வாறான துன்பங்களை அனுபவித்து வருகிறோம்.

தற்போது கிராமங்களில் வீதி புனரமைப்பு உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

ஆனால், ஏனைய அனைத்து செயற்பாடுகளும் அவ்வாறே நிறுத்தப்பட்டுள்ளன. நாட்டில் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக்கொண்டிருக்கிறது.

அரசாங்கம் என்ன செய்கிறது என புரியவில்லை. ஜனாதிபதியின் சகோதரனாக இருந்தாலும், இவ்வாறான செயற்பாடுகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை “ என மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply