பிரெக்சிட் விவகாரம்- பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வி
ஐரோப்பா கண்டத்தை சேர்ந்த 28 நாடுகள் இணைந்து ஐரோப்பிய யூனியன் அமைத்துள்ளது. அதில் கடந்த 1973-ம் ஆண்டு முதல் பிரிட்டனும் அங்கம் வகித்து வருகிறது. ஐரோப்பா முழுவதும் ஒரே நாடு என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் ஐரோப்பிய யூனியன் செயல்படுகிறது. அதில் இணைந்துள்ளதால் பிரிட்டன் தனது தனித்தன்மையையும் இறையாண்மையையும் இழந்துவிட்டதாக ஒரு பிரிவினர் குற்றம்சாட்டினர்.
அதைத் தொடர்ந்து ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான பிரெக்சிட் பொது வாக்கெடுப்பு கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்றது. அதில் பெரும்பாலான வாக்காளர்கள் பிரெக்சிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எனவே பிரெக்சிட் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனால் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான நடவடிக்கையை மார்ச் 29-ந்தேதிக்குள் முடிவு செய்ய வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு பிரிட்டன் வெளியேறுவதற்கான விதிகள் மற்றும் நிபந்தனைகள் அடங்கிய பிரெக்சிட் ஒப்பந்தம் உருவாக்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு எதிராக 432 எம்.பி.க்களும், ஆதரவாக 202 உறுப்பினர்களும் வாக்களித்தனர். அதன் மூலம் பிரதமர் தெரசா மே தரப்பு தோல்வி அடைந்தது.
நேற்று நடைபெற்ற வாக்கெடுப்பில் பிரதமர் தெரசா மேயின் கட்சி எம்.பி.க்களே அவருக்கு எதிராக வாக்களித்து நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளனர். இத்தகைய வரலாறு கடந்த 19-ம் நூற்றாண்டில் நடைபெற்றது.
1886-ம் ஆண்டு பிரதமராக இருந்த வில்லியம் கிளேடுஸபோன் அயர்லாந்து உள்நாட்டு கொள்கையை ஆதரித்தார். அது குறித்த வாக்கெடுப்பில் ஆளும் லிபரல் கட்சி 2 ஆக உடைந்து, தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. அதே நிலை தற்போது திரும்பியுள்ளது.
தெரசா மே கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தம் பாராளுமன்றத்தில் தோல்வியடைந்த நிலையில், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சி தலைவர் ஜெர்மி கார்பைன் பிரதமர் தெரசா மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை தாக்கல் செய்து பேசிய அவர், தெரசா மேயின் 2 ஆண்டு கால ஆட்சி தோல்வி அடைந்துவிட்டதால் அவர் மீது நம்பிக்கை இல்லை என்றார்.
இந்நிலையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பாராளுமன்றத்தில் விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெற்றது. வாக்கெடுப்பின் முடிவில் இங்கிலாந்து பாராளுமன்றத்தில் பிரதமர் தெரசா மேக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் தோல்வியில் முடிந்நது.
நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக 306 பேரும் எதிராக 325 பேரும் வாக்களித்ததால் தெரசா மே அரசு தப்பியது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply