கேமரூனில் துப்பாக்கி முனையில் கடத்தப்பட்ட 36 பயணிகளும் விடுவிப்பு

மத்திய ஆப்பிரிக்க நாடான கேமரூனின் தென்மேற்கு பிராந்தியத்தில், பியூவா-கும்பா நெடுஞ்சாலையில் சென்ற பயணிகள் பேருந்தை, ஆயுதம் தாங்கிய கும்பல் தடுத்து நிறுத்தியது. அதில் 36 பயணிகள் இருந்தனர். அவர்களின் அடையாள அட்டைகளை பறித்த அந்த கும்பல், அனைவரையும் கீழே இறக்கி, துப்பாக்கியைக் காட்டி மிரட்டி கடத்திச் சென்றது. பேருந்து டிரைவரை, கும்பா பேருந்து நிலையத்திற்கு திரும்பி செல்லும்படி, அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் மிரட்டி அனுப்பி உள்ளனர்.

பேருந்து டிரைவர் கொடுத்த தகலின் அடிப்படையில் கடத்தப்பட்ட பயணிகளை மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்குச் சென்று, நெடுஞ்சாலையில் போக்குவரத்தை தடை செய்து அனைத்து வாகனங்களையும் சோதனையிட்டனர். ஆனால், கடத்தப்பட்டவர்கள் குறித்த எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், கடத்தப்பட்ட 36 பேரும் மறுநாள், அதாவது நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர். நீண்டதூரம் தங்களை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் அழைத்துச் சென்றதாகவும், தங்களிடம் இருந்த பணம், செல்போன்கள் மற்றும் பொருட்களை பறித்துக்கொண்டு பின்னர் விடுவித்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர்.

பயணிகள் விடுவிக்கப்பட்டு ஊர் திரும்பியதையடுத்து, கும்பாவில் உள்ளூர் மக்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் பங்கற்ற ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அப்போது, கடத்தல் சம்பவங்களை தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் வலியுறுத்தினர்.

ஆங்கிலம் பேசும் மக்கள் அதிகம் வாழும் தென்மேற்கு மற்றும் வடமேற்கு பிராந்தியங்களை தனி சுதந்திர நாடாக அறிவிக்க வலியுறுத்தி, பிரிவினைவாத அமைப்புகள் ஆயுத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால் அவர்களை ஒடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இதன் காரணமாக அரசுப் படைகளுக்கும், பிரிவினைவாத அமைப்புகளுக்குமிடையே தொடர்ந்து சண்டை நடைபெற்று வருகிறது.

இந்த பிராந்தியங்களில் ஆட்கடத்தல் சம்பவம் அதிகரித்து வருகிறது. இதற்கு ஆயுதம் தாங்கிய பிரிவினைவாதிகள் தான் காரணம் என அரசு குற்றம்சாட்டுகிறது. ஆனால், தங்கள் சுதந்திரப் போராட்டத்தை சர்வதேச அளவில் களங்கப்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் இந்த கடத்தல் சம்பவம் திட்டமிட்டு நடத்தப்படுவதாக பிரிவினைவாதிகள் கூறுகின்றனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply