13வது திருத்தச்சட்டமூலத்தைத் தொட்டுக்கூடப் பார்க்கத் தயாரில்லை: சம்பந்தன்
இலங்கை இனப்பிரச்சினைக்குத் தீர்வாக 13வது திருத்தச்சட்டமூலம் முன்வைக்கப்பட்டால் அதனைத் தொட்டுக்கூடப் பார்க்கத் தாம் தயாராகவில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் கூறினார்.
13வது திருத்தச்சட்டமூலம் பொருத்தமானது அல்ல எனக் கூறி தமிழர் விடுதலைக் கூட்டணி அதனை நீண்ட காலத்துக்கு முன்னரே நிராகரித்து விட்டதெனவும், தற்பொழுது மீண்டும் அதனை முன்வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாகவும் சம்பந்தன் இன்று வெள்ளிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.
“கிழக்கு மாகாணத்தை விடுவித்து மாகாணசபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டு அங்கு ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுவிட்டது என அரசாங்கம் கூறுகிறது. ஆனால், கிழக்கு மாகாணசபை உள்ளூராட்சி சபைகளைவிட மோசமாகவே செயற்பட்டு வருகிறது. மாகாண சபைக்கான அதிகாரங்கள் வழங்கப்படாமையே இதற்குக் காரணம்” என அவர் குற்றஞ்சாட்டினார்.
வடக்கு, கிழக்கைப் பிரித்த அரசாங்கம் அதற்கு மாற்றீடான தீர்வொன்றை இதுவரை முன்வைக்கவில்லையெனவும், இனப்பிரச்சினையை அரசியல் ரீதியாகத் தீர்க்கப்போவதாகக் கூறிக்கொண்டு அப்பாவித் தமிழர்கள் மீது அரசாங்கம் இராணுவ ரீதியான தாக்குதல்களை மேற்கொள்வதாகவும் சம்பந்தன் கூறினார்.
“தமிழர்கள் பிரிந்து செல்ல அனுமதித்தல் அல்லது ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வொன்றை முன்வைத்தல் அல்லது, தமிழர்களை முற்றாகக் கொன்றொழித்தல் ஆகிய மூன்று சம்;பவங்களில் ஒன்று நிறைவேற்றப்பட்டாலே இலங்கையின் இனப்பிரச்சினை முடிவுக்கு வரும். இல்லாவிட்டால் மேலும் 30 வருடங்களுக்கு இனப்பிரச்சினை தொடர்ந்துசெல்லும்” என அவர் குறிப்பிட்டார்.
கிழக்கை மீட்டபோது அங்குள்ள அப்பாவி மக்கள் மீது குண்டுக்களை வீசி அவர்களைச் சொந்த வீடுகளிலிருந்து வெளியேற்றி மரங்களிலும், பொது இடங்களிலும் தங்கவைத்துவிட்டு, கிழக்கை விடுதலைப் புலிகளிடமிருந்து மீட்டுவிட்டதாக அரசாங்கம் மார்தட்டிக் கொள்வதாக சம்பந்தன் கூறினார்.
மக்களைச் சொந்த வீடுகளிலிருந்து விரட்டியப்பதா கிழக்கின் மீட்பு எனக் கேள்வியெழுப்பிய சம்பந்தன், கிழக்கு மீட்கப்பட்டபோது 300 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்தார். கொல்லப்பட்டவர்கள் குறித்த பெயர் விபரங்களை சபையில் தான் ஏற்கனவே சமர்ப்பித்திருப்பதுடன், இந்தப் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த முஸ்லிம் இனத்தைச் சேர்ந்த முன்னாள் நீதிபதி ஒருவரின் தலைமையில் மூன்று இனங்களையும் சேர்ந்த முன்னாள் நீதிபதிகளை உள்ளடக்கிய விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததாகவும் சம்பந்தன் குறிப்பிட்டார்.
எனினும், தனது கோரிக்கைக்கு அரசாங்கம் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும்; எடுக்கவில்லையெனவும், தனது கோரிக்கையை அரசாங்கம் நிறைவேற்ற வேண்டுமெனவும் அவர் மீண்டும் வேண்டுகோள்விடுத்தார்.
இலங்கையின் இனப்பிரச்சினை விடயத்தில் தற்பொழுது இந்தியாவின் அக்கறை அதிகரித்திருப்பதுடன், இந்தியா கோரிக்கை விடுப்பதைப் போன்று தமிழர்களின் நலன் குறித்து இலங்கை அரசாங்கம் அக்கறை செலுத்துவதில்லையென சம்பந்தன் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply