அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் : டிரம்ப்

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் நாடாளுமன்றத்தில் செனட் மற்றும் பிரதிநிதிகள் சபைகளின் உறுப்பினர்கள் மத்தியில் ஜனாதிபதி உரையாற்றுவது வழக்கம். பிரதிநிதிகள் சபையின் தலைவர் விடுக்கும் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உரையை நிகழ்த்துவார். பட்ஜெட் செய்தி, நாட்டின் பொருளாதார நிலை உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் ஜனாதிபதியின் உரையில் இடம் பெறும்.

அந்த வகையில், வருகிற 29-ந் தேதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற வரும்படி ஜனாதிபதி டிரம்புக்கு பிரதிநிதிகள் சபையின் தலைவர் நான்சி பெலோசி அழைப்பு விடுத்தார். ஆனால் அவர் அடுத்த நாளே தனது அழைப்பை திரும்பப்பெற்றார்.

மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் பிரச்சினையால் அமெரிக்காவின் பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கி இருப்பதால், முதலில் அதற்கு தீர்வுகாண வேண்டும் என்றும், பின்னர் நாடாளுமன்றத்தில் உரை நிகழ்த்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ளும் விதமாக, அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு வரும் வரை நாடாளுமன்றத்தில் உரையாற்ற மாட்டேன் என டிரம்ப் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது டுவிட்டரில் கூறியதாவது:-

அரசுத்துறைகள் முடக்கம் நீடிக்கும் வேளையில், நாடாளுமன்றத்தில் உரையாற்ற நான்சி பெலோசி என்னை அழைத்தார். நான் அதனை ஏற்றுக்கொண்டேன். ஆனால் பின்னர் அவர் முடிவை மாற்றிக்கொண்டார். நாடாளுமன்ற உரைக்கு தாமதமான ஒரு தேதியை அவர் பரிந்துரைக்கிறார். அரசுத்துறைகள் முடக்கம் எப்போது முடிவுக்கு வருகிறதோ, அப்போதுதான் நான் நாடாளுமன்றத்தில் உரையாற்றுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply