மாகாண சபை தேர்தல் நடத்தப்படாமை தொடர்பில் கபே அதிருப்தி

நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைநிறுத்த முற்பட்டவர்கள் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் குரல் கொடுக்காமலிருப்பது கவலைக்குரிய விடயமென கபே அமைப்பின் பதில் நிறைவேற்றுப்பணிப்பாளர் மனாஸ் மக்கின் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தல் காலம் தாழ்த்தப்படுகின்றமை தொடர்பாக ஆதவன் செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தை நிலைபெற செய்வதற்காக கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இரவு பகல் பாராமல் பாடுபட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், இதுவரைக்கும் மக்கள் பிரதிநிதிகளை மாகாண சபைகளில் அமர்த்துவதற்கு எந்ததொரு நடவடிக்கையையும் மேற்கொள்ளாமல் இருக்கின்றனர்.

இலங்கையில் காணப்படுகின்ற 9 மாகாண சபைகளில் 6 மாகாண சபைகளின் கால எல்லை முடிவடைந்துள்ளது. ஏனைய 3 மாகாண சபைகளின் காலங்களும் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நிறைவுபெறும்.

அந்தவகையில் வடக்கு, கிழக்கு, மத்திய, வடமேற்கு, வட மத்திய, சப்ரகமுவ ஆகிய ஆறு மாகாண சபைகளின் காலங்கள் தற்போது நிறைவடைந்துள்ளன. அதேபோன்று மேல் மாகாணம், தென் மாகாணம், மற்றும் ஊவா மாகாணங்களின் காலஎல்லையும் எதிர்வரும் மாதங்களில் நிறைவடையவுள்ளன.

இந்நிலையில் தேர்தலை உரிய காலத்தில் நடத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஜனநாயகத்திற்கு விரோதமான செயற்பாட்டில் தற்போதைய அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.

இந்நிலையில் மாகாணசபை தேர்தலை நடத்துவது தொடர்பில் இறுதி தீர்மானத்தை எடுக்ககூடிய ஒரே இடம் நாடாளுமன்றமாகும்.

ஆகையால் மீள் எல்லை நிர்ணயம், புதிய தேர்தல் முறை தொழிநுட்பம் ஆகியவற்றில் சிக்கல் காணப்படுவதாக கூறி தேர்தல் நடத்துவதனை காலம் தாழ்த்தாமல் பழைய தேர்தல் முறையில் தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்றத்தின் ஊடாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என மனாஸ் மக்கின் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply