ஞானசார தேரரை மன்னித்து விடுவது நீதிக்கான தவறான முன்மாதிரி: ஜ.சட்டத்தரணிகள் சங்கம்

நீதிமன்றத்தினால் குற்றவாளியாக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்வது நீதித்துறைக்கான தவறான ஒரு முன்மாதிரியாக அமைந்து விடும் என ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

அச்சங்கம் வெளியிட்டுள்ள விசேட அறிவித்தல் ஒன்றில் இதனைக் கூறியுள்ளது.

குற்றவாளியாகவுள்ள தேரரை விடுதலை செய்வதனால், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் விசாரணை உட்பட ஏனைய முக்கிய விடயங்கள் தொடர்பான விசாரணைகளுக்கு குறிப்பிடத்தக்களவு அச்சுறுத்தல் விடுக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அச்சங்கம் குறிப்பிட்டுள்ளது.

ஞானசார தேரருக்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்குவது, குற்றங்களுக்கு தண்டனை வழங்கப்படாது விடுவதை நியாயப்படுத்தும் ஒரு நிலைமையை உருவாக்கும். அத்துடன், பாதிக்கப்பட்டவர்களும், சாட்சியாளர்களும் நீதியை அனுகுவதை நிராகரிக்கும் சூழ்நிலையை உருவாக்கும்

சிறைக் கைதி ஒருவருக்கு மன்னிப்பு வழங்கும் அதிகாரம் நீதித்துறையின் அதிகபட்ச நடவடிக்கைக்குட்பட்டது எனவும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்க முன்னர் சட்ட மா அதிபரிடமும் நீதி அமைச்சிடமும் அறிக்கையொன்றைக் கோர வேண்டும் எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும், இதுவரையில் எந்தவித அறிக்கையும் ஜனாதிபதியினால் கோரப்படவில்லையெனவும் கூறப்படுகின்றது.

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டிருக்கும் ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதன் ஊடாக நீதிமன்றத்துக்குள் நீதிமன்றத்தை அச்சுறுத்தும் விதமாக செயற்பட முடியும் என்ற தவறான முன்மாதிரியை பொதுமக்கள் பெற்றுக்கொள்வதற்கு காரணமாக இருக்கும்.

பல்வேறு தரப்பினரும் விசேடமாக மதத் தலைவர்களும் பௌத்த மத விவகார அமைச்சரினூடாக ஜனாதிபதியிடம் மன்னிப்புக் கோரியுள்ளதாக அறிய முடிவதாகவும், குற்றவாளியொருவருக்கு மன்னிப்பு வழங்குவது தொடர்பில் பௌத்த மத விவகார அமைச்சர் ஒருவர் இவ்வாறு கோருவதற்கு தார்மீக அடிப்படைகள் எதுவும் கிடையாது எனவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஞானசார தேரர் பௌத்த மதத்துக்கு பாரிய சேவை ஆற்றிய ஒருவர் எனவும், இதனால், அவருக்கு ஜனாதிபதியின் பொது மன்னிப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் சில தரப்புக்கள் தெரிவித்துள்ளன. ஆனால், ஞானசார தேரர் பௌத்த மதத்துக்கு எதிராகவும், நாட்டில் மத ரீதியிலும், வர்க்க ரீதியிலும் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக செயற்பட்டவர் எனவும் அச்சங்கம் கூறியுள்ளது.

நீதிமன்றத்தை அவமதித்தல், சாட்சியாளர்களை அச்சுறுத்தல் போன்ற குற்றச்சாட்டுக்களுக்கு புறம்பாகவும் ஞானசார தேரர் மீது இன்னும் பல குற்றச்சாட்டுக்கள் காணப்படுவதாகவும் ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply