காந்தியை கொலை செய்வதற்கு கோட்சே நெருங்கியது எவ்வாறு?

மகாத்மா கொலையுண்டு நேற்று 71 வருடங்கள் மகாத்மா காந்தியின் நினைவு தினம் நேற்று ஆகும். அவரது அர்ப்பணிப்புகளையும், அவரது கொலை குறித்தும் உலகம் இன்றும் பேசியபடிதான் உள்ளது.

மகாத்மா காந்தியடிகளை கொலை செய்தவர் நாதுராம் கோட்சே என்பவர். அவரால் காந்தியடிகளை நெருங்க முடிந்தது எப்படி என்ற தகவலை காந்தியின் உதவியாளர் கல்யாணம் தெரிவித்திருந்தார். காந்தியடிகள் கடந்த 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ஆம் திகதி நாதுராம் கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார். நேற்று காந்தியடிகளின் நினைவு தினம் இந்தியா உட்பட உலகின் பல நாடுகளில் அனுஷ்டிக்கப்பட்டது.

காந்திஜியை கோட்சே எப்படி கொலை செய்தார் என்பது குறித்து அவரது உதவியாளர் கல்யாணம் (வயது 96) ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு அண்மையில் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“காந்திஜி படுகொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னர் அரசிடம் இருந்து இரகசிய தகவல் கிடைத்தது.

எனவே காந்தியடிகளுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு முன்வந்தது. ஆனால் காந்தியோ அதை நிராகரித்து விட்டார். காந்தி கூறுகையில் ‘எனக்கு பாதுகாப்பு மீது நம்பிக்கை இல்லை. எனவே எனக்கு பாதுகாப்பெல்லாம் வேண்டாம். அதை மீறி நீங்கள் (அரசு) பாதுகாப்பு அளித்தால் நான் டெல்லியை விட்டே சென்று விடுவேன்’ என்றார்.

ஒருவேளை பாதுகாப்புக்கு காந்தி ஒப்புக் கொண்டிருந்தால் அவரை சந்திக்க வந்தவர்களையெல்லாம் சோதனை செய்து அனுப்பியிருக்கலாம். காந்தி படுகொலையும் நடக்காமல் இருந்திருக்கும்”.

இவ்வாறு கூறினார் கல்யாணம்.

காந்தியுடனான முக்கியமான மறக்க முடியாத சம்பவத்தை பற்றி கூறுமாறு கல்யாணத்திடம் கேட்ட போது அவர் கூறுகையில், “நீங்கள் மிகப்பெரிய தலைவர். ரயிலில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் எதற்கு?’ என்று கூறிய ஒரு ஸ்டேஷன் மாஸ்டரை காந்தி கண்டித்தார்.

காந்தி பயணம் செய்வதற்காக தனியாக ஒரு பெட்டி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் என்னிடம் பணத்தை தந்து எங்களது ரயில் பயணத்துக்கான மூன்றாம் வகுப்பு டிக்கெட்டை வாங்கி வருமாறு கூறினார்” எனத் தெரிவித்த கல்யாணம் தமிழகத்தைச் சேர்ந்தவராவார். அவர் 1943-ஆம் ஆண்டு முதல் காந்தி இறக்கும் வரை உதவியாளராக பணியாற்றினார்.

நன்றி. தினகரன்

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply