புலிகள் சரணடையத் தயார் எனும் கே.பி.யின் அறிவிப்பு வி.பி.யின் காலம் கடந்த `அரசியல்` ஞானம்
வன்னி நிலமையானது போக்கற்ற மிகப்பெரிய ஒரு மனிதப் பேரவலம் என்றும், இக்கட்டத்தில் மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்ட இவ் இரக்கமில்லாத யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ எனவும், புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. தெரிவித்துள்ளதாக தமிழ்நெற் செய்தி வெளியிட்டுள்ளது. அதாவது ஆயுதங்களை கைவிட்டு புலிகளின் சரணடையத் தயார் என்பதையே சொல்லாமல் சொல்லியுள்ளார் புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. அவர்கள்.
அமெரிக்க ஜனாதிபதி ஓபாமாவின் அழைப்புக்கு மதிப்பு கொடுத்து மக்களின் உயிர்களைக் காப்பாற்றும் எந்த நடவடிக்கையையும் எடுப்பதற்கு தயாராக உள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி ஓபாமாவின் நம்பிக்கைச் சொற்கள் தமக்கு ஊக்கமளிப்பதாகவும் அவர் கேட்டுக்கொண்டதுபோல் சமாதானத் தீர்வுக்காக தாம் ஒத்துழைக்கவும் சேர்ந்து வேலை செய்யவும் தயார் எனவும் கே.பி. சொல்வது அரசியல் ஊதாரித்தனத்தின் கேடுகெட்ட கடைசி் நிலையாகும்.
புலிகள் ஒட்டு மொத்தமாக தமிழ் இனத்தின் அரசியல் இருப்பைக் கருவறுத்துள்ளனர்.
எத்தனையோ சந்தர்ப்பங்களை பாழாக்கிய போதும் கடைசியாக, சித்திரைப் புதுவருடத்தை ஒட்டி அரசு அறிவித்த 48 மணிநேர யுத்த நிறுத்தத்தை புறங்கையால் தள்ளி, தமிழ் மக்களை இந்த மாபெரும் மனித பேரவலத்தில் தள்ளிய முழுப்பொறுப்பும் புலிகளின் தலைவர் வி.பி.யினுடையது.
யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்ட மக்களைக் காப்பாற்ற தாம் ’எதையும் செய்ய தயார்’ என புலிகளின் சர்வதேச பொறுப்பாளர் கே.பி. இன்று சொல்லமுடியுமாயின் ஏன் இதை நான்கு வாரங்களுக்கு முன் சொல்லியிருக்கக் கூடாது. புலிகளை இவ்வாறு சொல்லச்சொல்லி வீதிக்கு இறங்கிய புலம் பெயர்ந்த தமிழர்கள் புலிகளை நிர்ப்பந்தித்திருந்தால் வி.பி.யின் தலையெழுத்தும் இன்று வேறாகியிருக்கலாம். முல்லைத்தீவில் தமிழ் மக்கள் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள்.
புலிகளால் பலாத்காரமாக பணயமாக்கப்பட்டு யுத்தத்தில் சிக்கிக்கொண்ட ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தால் புலம்பெயர்ந்த தமிழரின் ஒரு பகுதியினர் கைகள் கறையாக்கப்பட்டுள்ளன.
வரலாற்றின் முன் இவர்கள் குற்றவாளிகள்.
சட்டம் இவர்களை தண்டிக்க முடியாது போயினும் இனிவரும் காலம் இவர்களுக்கு கருணை காட்டாது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply