நாம் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து சுதந்திரமான இலங்கையை உருவாக்கி இருக்கிறோம்: பாலித கொஹன

இறைமையுள்ள ஒரு நாட்டின் ஒரு சதுர கிலோமீற்றர் பரப்புக்குள்ளேனும் பயங்கரவாதிகள் இருப்பின் அது அந்நாட்டின் சுதந்திரத்துக்கு குந்தகம் விளை விக்கும். அந்த வகையில் நாம் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து சுதந்திரமான இலங்கையை உருவாக்கியிருக்கிறோம். வெளிவிவகார செயலாளர் பாலித்த கொஹன இவ்வாறு தெரிவித்தார். வெளிநாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்கள் மேற்கொள்ளும் அநாவசிய செயற்பாடுகள் காரணமாகவே சர்வதேச நாடுகளும் அதன் தலைவர்களும் இலங்கை அரசாங்கத்துக்கு பல் வேறுபட்ட அழுத்தங்களை கொடுக்க வேண்டிய சந்தர்ப்பம் ஏற்பட்டதாகவும் செயலாளர் கொஹன குறிப்பிட்டார்.

நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில் :

சர்வதேச நாடுகளில் வாழும் புலிகளின் ஆதரவாளர்கள் வீதிகளை மறித்தும் பாராளுமன்றத்தை மறித்தும் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வதனாலும் உண்ணாவிரதம் இருப்பதனாலும் அந்நாட்டின் அரசியல்வாதிகள் இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நிர்ப்பந்திக்கப்படுகின்றனர்.புலிகள் பயங்கரவாத செயற்பாடுகளை முன்னெடுத்து வந்த சமகாலத்தில் கடந்த 30 வருடங்களாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்தோருக்கு உணவளித்தது அரசாங்கம் என்பதை அவர்கள் மறந்துவிட்டனர். சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசாங்கம் அவர்களுக்காக வழங்கியது.

சுனாமியால் பாதிக்கப்பட்டோருக்காக அனுப்பி வைக்கப்பட்ட சீமெந்தில் புலிகள்தான் பதுங்கு குழிகள் அமைத்துள்ளார்களே ஒழிய பொதுமக்களுக்காக எதுவும் வழங்கவில்லை.எமது நாட்டு சிவிலியன்களை மீட்க வேண்டியது எமது கடமை. நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைய நாம் அவர்களை மீட்டுள்ளோம். வடக்கில் பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தி மக்களிடையே ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் மூலம் அவர்களுக்கு சந்தோஷமான வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதே இனி எமது நோக்கம். அதையும் வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply