துபாயிலிருந்து மும்பைக்கு கடத்தல் : 106 கிலோ தங்கம் பறிமுதல்

மும்பை, டோங்கிரி பகுதிக்கு வெளிநாட்டில் இருந்து தங்கம் அதிகளவில் கடத்தி கொண்டு வரப்படுவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக (டி.ஆர்.ஐ.) அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் சம்பவத்தன்று டோங்கிரி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு வந்த ஒரு கார், மோட்டார் சைக்கிளை அதிகாரிகள் வழிமறித்து நிறுத்தி சோதனை போட்டனர். இந்த சோதனையில் கார் மற்றும் மோட்டார் சைக்கிளில் அதிகளவில் தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் அவற்றை அதிரடியாக பறிமுதல் செய்தனர். 75 கிலோ எடை கொண்டதாக இருந்த அந்த தங்கத்தின் மதிப்பு ரூ.24 கோடி என்பது தெரியவந்தது.

இதையடுத்து அதிகாரிகள் கார், மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அப்துல் (வயது26), சேக் ஆகாத் (32) ஆகிய 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மேலும் சிலருக்கு இந்த கடத்தலில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் இதில் தொடர்புடைய கேரளாவை சேர்ந்த நிசார் அலி (வயது 43), டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வரும் சோயிப் (47), நகை வியாபாரி ராஜூ மனோஜ் ஜெயின் (32), பழவியாபாரி ஆகுல் (39), பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் (34) ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான நிசார் அலி துபாயில் கால் சென்டர் நடத்தி வருகிறார். அவர் தான் தங்கத்தை பித்தளை என கூறி துபாயில் இருந்து கடத்தி மும்பைக்கு கொண்டு வருவார். இதற்கு பித்தளை பொருள் வியாபாரி ஹாப்பி தக்காட் உடந்தையாக இருந்து உள்ளார்.

தங்கம் மும்பை வந்தவுடன் சோயிப், ராஜூ மனோஜ் ஜெயின் ஆகியோர் அதை கள்ள சந்தையில் விற்பனை செய்வார்கள். அந்த பணத்தை துபாய் திர்ஹாமாக மாற்றி பழ வியாபாரி ஆகுல், நிசார் அலிக்கு அனுப்பி வைத்து உள்ளார். அப்துல் மற்றும் சேக் ஆகாத் டிரைவர்கள் ஆவர்.

கைது செய்யப்பட்டவர்களின் வீடுகளில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சோதனையில், அங்கும் அதிகளவில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த தங்கம் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

மொத்தமாக கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பலிடம் இருந்து ரூ.32 கோடி மதிப்பிலான 106 கிலோ தங்கம் மற்றும் ரூ.1 கோடியே 81 லட்சம் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட கடத்தல் கும்பல் கடந்த 3 மாதங்களில் துபாயில் இருந்து மும்பைக்கு பித்தளை என கூறி 200 கிலோ தங்கத்தை கடத்தி வந்திருப்பதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடத்தல் கும்பலிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply