வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பது அரசியலமைப்புக்கு முரணானது : ரவூப் ஹக்கீம்
வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இலங்கை விவகாரத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது. உள்நாட்டு பொறிமுறை மூலம் யுத்த காலத்தில் நடந்து தவறுகளுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதில் அனைவரும் நம்பிக்கை கொள்ளவேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
ருவன்வெல்ல, வெந்தல விஸ்தரிக்கப்பட்ட குடிநீர் இணைப்பை நேற்று (31) திறந்துவைத்தபின், ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர் மேலும் கூறியதாவது;
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் மாநாடு அண்மையில் ஜெனீவாவில் நடைபெற்றபோது, அங்கு பேசப்பட்ட விடயங்களுக்கு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் திலக் மாரப்பன, கடந்த காலங்களில் அரசு வழங்கிய வாக்குறுதிகளை மீறாத வகையில் செயற்படுவதற்கான பொருத்தத்தை வழங்கியிருக்கிறார்.
இன நல்லிணக்கத்துக்காக உள்நாட்டில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களை செயற்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் நாட்டின் அரசியலமைப்புக்கு அமைவாக, குற்றமிழைத்தவர்களை தண்டிப்பதற்கு அரசாங்கம் இணங்கியுள்ளது.
நாட்டின் நீதித்துறையில் நம்பிக்கையிழந்து, வெளிநாட்டு நீதிபதிகளை கொண்டுவந்து இந்த விடயத்தை கையாள்வது அரசியலமைப்புக்கு முரணானது என்பதை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தெளிவாக சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
எனவே, சர்வதேச நீதிமன்றம் அல்லது கலப்பு நீதிமன்றத்தை விட, உள்நாட்டு பொறிமுறை மூலமே இதற்கு தீர்வு காணப்படவேண்டும். யுத்த காலத்தில் நடந்த தவறுகளுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் விதத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமையும் என்பதில் நம்பிக்கை கொள்ளலாம் என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply