இந்தியாவில் கலகம் விளைவிக்க முயற்சி? : பாகிஸ்தான் ராணுவம் தொடர்புடைய 103 பேஸ்புக் கணக்குகள் முடக்கம்
காஷ்மீர் மாநில உரிமைகள், இந்திய அரசின் செயல்பாடு மற்றும் உள்நாட்டு பிரச்சனைகள் தொடர்பாக அவதூறான தகவல்களும், கருத்துகளும் தற்போது பாகிஸ்தானில் இருந்து சமூக வலைத்தளங்களின் வாயிலாக அதிகமாக பகிரப்படுகின்றன.
அவ்வகையில், பேஸ்புக், இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக் குழுக்களில் பரப்பப்படும் தகவல்களை பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சமீபகாலமாக தொடர்ந்து கண்காணித்து வந்தனர்.
பாகிஸ்தானில் இருந்து போலியான பெயர்களில் தொடங்கப்பட்ட இதுபோன்ற சில கணக்குகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உளவுப்பிரிவுடன் (ISPR) தொடர்பு கொண்டிருப்பது கண்காணிப்பில் உறுதிப்படுத்தப்பட்டது. இத்தகைய போலி கணக்குகளில் சிலவற்றை சுமார் 28 லட்சம் பேர் பின்தொடர்வதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்தியாவுக்கு எதிரான அவதூறான போலி தகவல்களை பரப்பும் இந்த சமூக வலைத்தளப் பிரசாரம், பாகிஸ்தான் ராணுவத்தின் அதிகாரிகள் மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட தொடர்பா? அல்லது, ராணுவத்தில் பணியாற்றும் சிலரின் தனிப்பட்ட ஆர்வத்தினால் ஏற்படுத்தப்பட்ட தொடர்பா? என்பது இன்னும் தீர்மானமாக தெரியாத நிலையில் இதில் ஈடுபாடு காட்டிய நபர்களின் பெயர்களை ரகசியமாக வைத்திருக்க பேஸ்புக் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவாளர்கள், அபிமானிகள், விசிறிகள், பொழுதுப்போக்கு அம்சங்கள், காஷ்மீரிகள் சமூகம் என்ற போலி பெயர்கள் மற்றும் அடையாளங்களுடன் இந்தியா மற்றும் இந்திய அரசுக்கு எதிரான விஷமத்தனமான பிரச்சாரத்தில் சிலர் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இப்படி இன்ஸ்ட்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் செயல்பட்டு வந்த 24 (வலைப்பூ) பக்கங்கள், 57 பேஸ்புக் போலி கணக்குகள் மற்றும் 15 இன்ஸ்ட்டாகிராம் கணக்குகள் என பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவுடன் தொடர்புடையை 103 கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாக பேஸ்புக் நிறுவனத்தின் சைபர் பாதுகாப்புத்துறையின் தலைவர் நாதனியேல் கிலெய்ச்செர் இன்று தெரிவித்துள்ளார்.
இந்த இணைப்புகள் மூலம் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் முதல் 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை பகிரப்பட்ட சில தகவல்கள் சுமார் 1100 அமெரிக்க டாலர்கள் அளவிலான பணத்தை விளம்பர கட்டணமாக செலுத்தி வெளியிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார். பார்ப்பதற்கு இவை ஒன்றொன்றும் தனிப்பட்ட கணக்குகள் போல் தோன்றினாலும் இவை அனைத்தும் ஒரு மையப்புள்ளியில் ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இத்தகைய போலி கணக்குகளை நிர்வகித்து வந்த நபர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்க முடியாது. இதுதொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் படைத்த சம்பந்தப்பட்ட நாடுகளின் தலைமை ஆட்சியாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானை பொருத்தமட்டில் தலைமை ஆட்சியாளர் என்ற முறையில் இதுதொடர்பாக யாருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது? என்ற கேள்விக்கு பதிலளித்த நாதனியேல் கிலெய்ச்செர், ‘பாகிஸ்தான் பிரதமர் அலுவகலம் மற்றும் பிரதமரின் ஊடகத்துறை ஆலோசகருக்கு தெரியப்படுத்தியுள்ளோம்’ என தெரிவித்தார்.
இவ்விவகாரம் பாகிஸ்தான் ஊடகங்களில் இன்று செய்தியாக வெளியாகியும் இதுதொடர்பாக பாகிஸ்தான் ராணுவத்தின் தரப்பில் இருந்து எவ்வித மறுப்போ, விளக்கமோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply