சென்னை-சேலம் 8 வழி சாலைக்கான அரசாணை ரத்து: சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

சென்னை-சேலம் 8 வழி பசுமைச்சாலை திட்டம் ரூ.10 ஆயிரம் கோடி செலவில் மேற்கொள்ள மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டது. இந்த திட்டத்துக்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 5 மாவட்டங்களில் சுமார் 1,900 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதில் ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, அழிக்கப்படுவதை விவசாயிகள் கடுமையாக எதிர்த்தனர். இந்த திட்டத்தை எதிர்த்து தீவிர போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த திட்டத்துக்கு தடை கேட்டும், திட்டத்தை ரத்து செய்ய கோரியும் சென்னை ஐகோர்ட்டில், விவசாயி கிருஷ்ணமூர்த்தி, தர்மபுரி எம்.பி., அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானிசுப்பராயன் ஆகியோர் விசாரித்தனர். தொடர்ந்து 8 மாதங்கள் விசாரணை நடைபெற்றது. வாதப் பிரதிவாதங்கள் மற்றும் எழுத்துப்பூர்வமான வாதங்கள் கடந்த ஜனவரி மாதம் நிறைவடைந்ததையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், சென்னை-சேலம் 8 வழிச்சாலைத் திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என உத்தரவிட்டனர். 15 கேள்விகளை ஆராய்ந்து தீர்ப்பு வழங்கி உள்ளதாகவும், 8 வழிச்சாலை திட்டம் தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அரசாணையை ரத்து செய்வதாகவும் கூறியுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply