அதிமுக அரசை கவிழ்க்கும் வாய்ப்பு திமுகவுக்கு கிடைக்கும்: மு.க.ஸ்டாலின்

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி விவரம்:-

கேள்வி:- உங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு எந்த நிலையில் உள்ளது.

பதில்:- மோடி மற்றும் அ.தி.மு.க. அரசு மீது மக்கள் கடும் கோபத்தில் இருப்பதை காண முடிந்தது. மக்கள் தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஓட்டளிக்க தயாராகி விட்டனர். தமிழகம் புதுவை உள்பட அனைத்து தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.

கே:- ஒருவேளை தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதாவுக்கு தி.மு.க. ஆதரவு அளிக்குமா?

ப:- இந்த தேர்தலில் பிராந்திய கட்சிகள் முக்கிய சக்தியாக இருக்கும். மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்ற எண்ணம் நாட்டின் அனைத்து மாநில மக்களிடமும் உள்ளது. ஏன் என்றால் மத்திய அரசால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். தொங்கு பாராளுமன்றம் ஏற்பட்டால் பாரதிய ஜனதா மீண்டும் ஆட்சி அமைக்கவிடாமல் தடுக்க நாங்கள் அனைத்து முயற்சிகளையும் செய்வோம். மத சார்பற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம்.

கே:- பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி, தெலுங்கானா, ராஷ்டீரிய சமிதி, ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் போன்ற 3-வது அணி கட்சிகள் தான் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் தி.மு.க.வின் நிலைபாடு எப்படி இருக்கும்?

ப:- பாசிச பாரதிய ஜனதா ஆட்சியை வீழ்த்திவிட்டு ராகுல் காந்தி தலைமையில் அரசு அமைப்பது என்பதே எங்களது ஒரே குறிக்கோள். தொங்கு பாராளுமன்றம் அமைந்தால் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் மற்றும் இதர கட்சிகளுடன் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.

கே:- 22 தொகுதி இடைத்தேர்தலும் நடப்பதால் மாநில அரசை கவிழ்க்க முடியும் என்று கருதுகிறீர்களா?

ப:- ஜெயலலிதா மரணம் அடைந்துவிட்ட நிலையில் இந்த ஆட்சியை இன்னுமா விட்டு வைத்து இருக்கிறீர்கள்? என்று எங்களிடம் மக்கள் கேட்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நாங்கள் ஜனநாயக ரீதியில் தான் செயல்படுவோம். 22 தொகுதி இடைத்தேர்தல் முடிவு எங்களுக்கு இந்த அரசை கவிழ்க்கும் வாய்ப்பை ஏற்படுத்தி தரும். மக்களின் விருப்பத்தை நாங்கள் ஜனநாயக ரீதியாக நிறைவேற்றுவோம்.

கே:- கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து உங்களுக்கு தேவையான மெஜாரிட்டி கிடைத்தால் நீங்கள் ஆட்சி அமைப்பீர்களா? அல்லது சட்டசபையை கலைக்க சொல்வீர்களா?

ப:- கூட்டணி கட்சியினருடன் கலந்து பேசி முடிவு எடுப்போம். மக்கள் விருப்பத்தை நிறைவேற்றுவோம். பொறுத்திருந்து பாருங்கள்.

கே:- அ.தி.மு.க. அரசு கவிழும் என்று நீங்கள் தேர்தல் பிரசாரத்தின் போது கூறினீர்கள். எதை வைத்து நீங்கள் இப்படி சொன்னீர்கள்?

ப:- எடப்பாடி அரசு மைனாரிட்டியாக உள்ளது. அனைத்து அரசியல் சாசன விதிகளும் மீறப்பட்டு மத்திய அரசின் உதவியால் இந்த அரசு நீடித்து கொண்டிருக்கிறது. தமிழ்நாடு மற்றும் மத்தியில் இந்த தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

கே:- பிரசாரத்தின் போது உங்கள் தந்தை இல்லாத நிலையை எப்படி உணர்ந்தீர்கள்?

ப:- அவர் இல்லாதது மிகவும் கஷ்டமாக இருந்தது. நான் அவரை தந்தையாக பார்த்ததை விட தலைவராகத் தான் அதிகமாக பார்த்தேன். அவர் ‘‘உடன்பிறப்பே’’என்று 60 ஆண்டுகளாக அழைத்த அந்த காந்தகுரல் இல்லாதது மக்களையும், தொண்டர்களையும் வேதனை அடைய செய்யும் ஒன்றாக இருந்தது. அவருடைய நுட்பங்களையும், வழிகாட்டுதல்களையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம். நான் அனைத்து அரசியல் பாடங்களையும் அவரிடம் இருந்து கற்று இருக்கிறேன். அவருடைய காலடி தடத்தை தொடர்கிறோம். அவர் இப்போது இருந்திருந்தால் என்னை வழிநடத்தி இருப்பார்.

கே:- தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் பலவகை கடன்களை தள்ளுபடி செய்வதாக கூறி இருக்கிறீர்கள். மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வருகிறது என்று வைத்து கொள்வோம். நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை இன்றைய நிதி நிலையில் நிறைவேற்ற முடியுமா?

ப:- நிச்சயமாக நிறைவேற்ற முடியும். 2006-ல் தி.மு.க. அரசு ஏற்பட்ட போது அன்றைய அ.தி.மு.க. அரசு கருவூலத்தை முற்றிலும் காலியாக்கி விட்டு சென்றிருந்தது. ஆனாலும் தலைவர் கருணாநிதி பதவி ஏற்றதும் ரூ. 7,000 கோடி விவசாய கடனை ரத்து செய்து முதல் கோப்பில் கையெழுத்திட்டார்.

இதனால் மாநில நிதி நிலைமை மோசமாகும் என்று விமர்சித்தனர். ஆனால் தொழில் முதலீட்டாளர்களை ஈர்த்து தொழில் வளத்தை பெருக்கினார். மத்திய அரசும் உதவி செய்ததால் பற்றாக்குறை மிகவும் குறைக்கப்பட்டது.

கடந்த 5 ஆண்டு மத்திய ஆட்சியில் அதானி, அம்பானி, அமித்ஷா மகன் போன்ற சில தொழில் அதிபர்களுக்கு தான் மத்திய அரசு உதவி இருக்கின்றது. மத்திய அரசின் தவறான கொள்கைகள் பண மதிப்பிழப்பு திட்டம் போன்றவற்றால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

நிதி நிலைமைகளை சமாளிக்க நாங்கள் சிறந்த கொள்கைகளை வைத்து உள்ளோம். தேர்தல் அறிக்கையில் கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவேன்.

கே:- தினகரன் மற்றும் அவரது கட்சி பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?

ப:- ஜனநாயகத்தில் சில கட்சிகள் உதயமாகும் சில கட்சிகள் காணாமல் போகும். இந்த கட்சியை பொறுத்தவரை பங்காளி சண்டையாகவே பார்க்கிறேன். இந்த சண்டையில் யார் சக்தி படைத்தவர்? யார் வீழ்ச்சி அடைவார் என்பது மே 23-ந் தேதி தெரியவரும்.

கே:- உங்கள் மகன் உதயநிதி இந்த தேர்தலில் நட்சத்திர பிரசாரமாக திகழ்ந்தாரே? அவருக்கு கட்சியில் ஏதேனும் முக்கிய பதவி வழங்குவீர்களா?

ப:- அவர் மீது ஊடகங்கள் அன்பு காட்டி காட்சி படுத்தியதற்கு நன்றி.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply