மேல் மாகாண சபையின் அதிகாரம் நாளை முதல் ஆளுநர் வசம்

மேல் மாகாண சபையின் பதவிக்காலம் நாளையுடன் (21) நிறைவடைவதாகவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை கைச்சாத்திடப்படவுள்ளதாகவும் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள ஒன்பது மாகாணங்களில் வடக்கு, கிழக்கு, வடமேல்,மத்திய, வடமத்திய,தெற்கு மற்றும் சப்ரகமுவ ஆகிய ஏழு மாகாணங்களின் பதிக்காலம் முடிவடைந்துள்ளன. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படாமை காரணமாக இம் மாகாணங்கள் தற்போது ஆளுநரின் அதிகாரத்தின் கீழ் காணப்படுகின்றன.

இவற்றுள் கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்கள் 2017 ஆம் ஆண்டுடனும் வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்கள் 2018 ஆம் ஆண்டுடனும் தென் மாகாணம் 2019 ஆம் ஆண்டுடனும் முடிவுக்கு வந்துள்ளன.

கிழக்கு மாகாணம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 30 ஆம் திகதியுடனும் வடமத்திய மாகாணம் 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதியுடனும் சப்ரகமுவ மாகாணம் 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் 26 ஆம் திகதியுடனும் முடிவுக்கு வந்தன.

வட மாகாணம் 2018 ஒக்டோபர் 24 ஆம் திகதியுடனும் வடமேல் மாகாணம் 2018 ஒக்டோபர் 10 ஆம் திகதியுடனும் மத்திய மாகாணம் 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 08 ஆம் திகதியுடனும் பதிக்காலம் முடிவடைந்தன. தென் மாகாணம் சபையின் காலம் கடந்த 10 ஆம் திகதியுடன் முடிவுக்கு வந்தது.

எனினும், ஊவா மாகாண சபையின் பதவிக்காலம் மட்டுமே அமுலில் இருக்கின்றது. இருப்பினும், அம் மாகாண சபையும் இவ்வருடம் ஒக்டோபர் 03 ஆம் திகதியுடன் முடிவுக்கு வரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply