180 நாட்களில் வன்னியில் இடம்பெயர்ந்தவர்கள் மீள்குடியமர்த்தப்படுவர்

யுத்தத்தால் வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த 280,000 பேரில் பெரும்பாலானவர்களை அடுத்த ஆறு மாதங்களுக்குள் மீளக் குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கையும் இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ் சங்கர் மேனன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோர் இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

இலங்கையில் 25 வருடங்களாகத் தொடர்ந்துவந்த புலிகளின் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுவிட்டதாக ஜனாதிபதி அவர்களிடம் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பினரும், இடம்பெயர்ந்திருக்கும் மக்களின் மீள்குடியேற்றம் பற்றிக் கலந்துரை யாடியிருந்தனர்.

“கூடிய விரைவில் நலன்புரி நிலையங்களை இல்லாமல் செய்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். 180 நாள் வேலைத்திட்டத்திற்கமைய இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீளக்குடியமர்த்தப்படுவார்கள்” என இலங்கையும், இந்தியாவும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் வடபகுதியில் கண்ணிவெடி அகற்றும் நடவடிக்கைகள், பொதுமக்களுக்கான உட்கட்டுமானங்கள், வீடுகள் நிர்மானம் போன்றவற்றுக்குத் தமது உதவிகளை வழங்கும் என இந்தியா உறுதியளித்துள்ளது.

பயங்கரவாதம் முற்றாக ஒழிக்கப்படும்வரை மக்களை முகாம்களுக்குள் தடுத்துவைக்கவேண்டிய தேவை இருந்ததாகவும், இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களில் சர்வதேச தரம் பேணப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை உறுதிப்படுத்தியிருப்பதாகவும் இலங்கை அரசாங்கம், இந்தியத் தூதுவர்களிடம் கூறியுள்ளது.

அதேநேரம், 22 வருடங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட இலங்கை-இந்திய ஒப்பந்தத்துக்கு அமைய அதிகாரப்பகிர்வுத் திட்டமொன்றை முன்வைக்க இலங்கை அரசாங்கம் தயாராகவுள்ளது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“இலங்கையிலுள்ள தமிழ் தரப்பினர் உட்பட அனைத்துத் தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தத் தாம் தயாரென்பதை இலங்கை அரசாங்கம் தெரியப்படுத்தியுள்ளது. இறுதிச் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு மேலும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என அந்த இணை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply