வெற்றிகளைத் தோற்கடிப்பதே பயங்கரவாத தாக்குதல்களின் நோக்கம் : பிரதமர்

முன்னர் காணப்பட்ட சமூக, அரசியல், பொருளாதாரச் சிக்கல்களை வெற்றிகொண்டு, அமைதியான சூழலொன்றில் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி அடியெடுத்து வைத்த எமது நாடு இந்த திடீர் பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக எதிர்கொண்ட தாக்கம் மிகவும் பாரியது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மே தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள செய்தியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டுக்காக வியர்வை சிந்தி, உழைத்த அப்பாவி மக்கள், கொடிய பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக உயிரிழந்து, காயமடைந்துள்ள சோகமானதொரு சந்தர்ப்பத்திலேயே இவ்வருட மே தினம் எம்மை அடைந்துள்ளது.

நாட்டில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தி நாம் பெற்றுக்கொண்ட அனைத்து வெற்றிகளையும் தோற்கடிப்பதே இத்தாக்குதல்களின் நோக்கம் என்பது தெளிவானது எனவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொழிலாளர் உழைப்பின் உண்மையான அர்த்தம் சமத்துவம், சகோதரத்துவம், சுயாதீனம் ஆகிய உயர் இலக்குகளிலேயே பொதிந்துள்ளன. நாம் விவசாய நிலத்தில், தொழிற்சாலையில், நவீன தொழிநுட்பம் மிகுந்த தொழில் நிலையங்கள் போன்ற எந்த இடத்தில் பணியாற்றினாலும் இனவாதம் அல்லது மதவாதத்தை ஒதுக்கி விட்டு மனிதநேயத்திற்கு மதிப்பளிக்க கடமைப்பட்டவர்களாக உள்ளோம். அப்போது தான் தனிநபர் என்ற வகையிலும், ஒட்டுமொத்த சமூகம் என்ற வகையிலும் நாட்டின் சமூக, பொருளாதார அபிவிருத்திக்கு எம்மால் பங்களிப்புச் செய்ய முடியும்.

சமாதானம் மற்றும் நல்லிணக்கம் ஊடாக வேலை செய்யும் மக்கள், பலவற்றை வெற்றி கொள்ள முடியும். இது வரை நாம் பெற்றுக்கொண்ட முன்னேற்றத்தை தீவிரவாத சக்திகள் தடுப்பதற்கு இடமளிக்காது நாம் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டியுள்ளது. நமது முன்பே காணப்படும் சமூக, பொருளாதார, அரசியல் சவால்களை வெற்றிகொள்ள நாம் ஒற்றுமையாகவும், மிகுந்த திடவுறுதியுடனும் எழுந்து நிற்க வேண்டும்.

இந்த எதிர்பாராத தாக்குதல்கள் காரணமாக புண்பட்ட உள்ளங்களை ஆற்றுப்படுத்திக்கொண்டு, எமது மக்களிடம் காணப்படும் பலங்களை இனங்கண்டு முன்னோக்கிச் செல்லும் பயணத்தில் வேலை செய்யும் மக்களின் உழைப்புக்கு உரிய பெறுமானம் வழங்கப்படும் நீதியான சமூகமொன்றைக் கட்டியெழுப்ப இம்முறை மே தினத்தில் அர்ப்பணிப்புச் செயற்படுவோம் எனவும் பிரதமர் தனது செய்தியில் கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply