கந்து வட்டி கொடுமை- தந்தை கண்முன்னே வாலிபர் வெட்டிக்கொலை
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் பாணாதுறை பத்துக்கட்டு தெருவில் வசித்து வருபவர் சிவசுப்பிரமணியன் (வயது 53). அதே பகுதியில் மளிகை கடை வைத்துள்ளார். இவரது மகன் அருண் (22). இவர் தந்தைக்கு உதவியாக மளிகை கடையில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் குடும்பச் செலவு மற்றும் வியாபாரத்துக்காகவும் பா.ம.க. முன்னாள் நிர்வாகி ஒருவரிடம் ரூ.7 லட்சம் வரை சிவசுப்பிரமணியன் கடன் வாங்கியிருந்தார். ஆனால் கடன் தொகையை திரும்பி கொடுக்க முடியாமல் வட்டியாக மட்டும் பல லட்சம் கொடுத்துள்ளார்.
இதற்கிடையே கடன் கொடுத்த பா.ம.க. முன்னாள் நிர்வாகி, கடன் பணத்தை கேட்டு அடிக்கடி தொல்லை கொடுத்து வந்துள்ளார். அப்போது ‘கந்து வட்டி போட்டு அசலுக்கு மேலே எங்களிடம் பணத்தை வசூலித்து விட்டீர்கள். இனிமேல் நாங்கள் கடன் தொகையை கொடுக்க மாட்டோம்’ என்று அருண் கூறினார். இதுதொடர்பாக பா.ம.க. முன்னாள் நிர்வாகிக்கும், அருணுக்கும் இடையே காரசாரமாக வாக்குவாதம் நடந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று இரவு மளிகை கடையில் தனது தந்தை சிவசுப்பிரமணியனுடன், அருண் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் அடையாளம் தெரியாத 2 பேர் மளிகை கடைக்குள் புகுந்தனர்.
அவர்கள் திடீரென அங்கு நின்ற அருணை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் நிலைகுலைந்து போன அருண், ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். தன் கண் முன்னே மகனை கும்பல் வெட்டியதை கண்டு சிவசுப்பிரமணியன் கூச்சல் போட்டார். இதனால் 2 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
உயிருக்கு போராடிய அருணை அக்கம்பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து கும்பகோணம் கிழக்கு போலீசார் விரைந்து வந்து விசாரித்தனர்.
அருண் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து அவரது உறவினர்கள், கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் முற்றுகையிட்டனர். இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ‘கொடுத்த கடனை திருப்பி கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் கூலிப்படையை ஏவி அருணை கொலை செய்திருக்கலாம் என்று தெரிய வந்தது.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய கொலையாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply