ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற எதிர்க்கட்சியின் உதவியை நாடும் தெரசா மே
ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறி விட வேண்டும் என்பது இங்கிலாந்தின் விருப்பம். இது தொடர்பாக 2016-ம் ஆண்டு நடந்த பொது வாக்கெடுப்பில், பெரும்பான்மை மக்கள் அரசின் முடிவுக்கு ஆதரவாக ஓட்டு போட்டனர். அதைத் தொடர்ந்து அப்போதைய பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகினார். புதிய பிரதமராக தெரசா மே பதவி ஏற்றார்.
அவர் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முறைப்படி விலகுவதற்கான ‘பிரெக்ஸிட்’ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.
இது தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் அவர் தொடர் பேச்சுவார்த்தை நடத்தி 585 பக்கங்களைக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அந்த ஒப்பந்தத்தை இங்கிலாந்து நாடாளுமன்றம் நிராகரித்து விட்டது.
முதன்முதலில் திட்டமிட்டபடி, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதற்கு மார்ச் 29-ந் தேதி வரை கெடு விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தெரசா மேயின் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தால் ஏற்கப்படாததால் மீண்டும் ஐரோப்பிய கூட்டமைப்பின் தலைவர்களுடன் கலந்து பேசி அக்டோபர் 31-ந் தேதி வரை நீட்டிப்பு பெற்றுள்ளார்.
இதற்கிடையே சமீபத்தில் நடந்துள்ள உள்ளாட்சி தேர்தல்களில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி பெரும்பான்மையான இடங்களில் தோல்வியைத் தழுவி உள்ளது.
இந்த நிலையில் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவது தொடர்பான புதிய ஒப்பந்தம் நிறைவேற எதிர்க்கட்சியான தொழிற்கட்சியின் தலைவர் ஜெரேமி கார்பைனின் உதவியை பிரதமர் தெரசா மே நாடி உள்ளார்.
இதுபற்றி அவர் குறிப்பிடுகையில், “இங்கிலாந்து வாக்காளர்கள் சொன்னதை (பிரெக்ஸிட்டுக்கு ஆதரவாக வாக்களித்தது) தொழிற்கட்சி காது கொடுத்து கேட்க வேண்டும். கருத்து வேறுபாடுகளை பின்னுக்கு தள்ளிவிட்டு பிரெக்ஸிட் ஒப்பந்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறுவதற்கு தொழிற்கட்சி உதவ வேண்டும்” என கூறினார்.
கட்சிக்கு அப்பாற்பட்டு ஒன்றுபட்டு நின்று இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் ஆளும் கன்சர்வேடிவ் மற்றும் எதிர்க்கட்சியான தொழிற்கட்சி இடையே மீண்டும் நாளை (செவ்வாய்க் கிழமை) பேச்சுவார்த்தை தொடங்க உள்ளது.
இதற்கிடையே ‘பிரெக்ஸிட்’ இறுதி ஒப்பந்தம் தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் இங்கிலாந்தில் எழுந்துள்ளது. இது தொடர்பான கோரிக்கையில் எதிர்க்கட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட எம்.பி.க்கள் கையெழுத்து போட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply