குறைந்த தூர ஏவுகணை சோதனை நடத்தி அமெரிக்காவுக்கு அதிர்ச்சி அளித்த வடகொரியா
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலும், அமெரிக்காவும் விதித்த பொருளாதார தடைகளை மீறியும், உலக நாடுகளின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் வட கொரியா தொடர்ந்து அணு ஆயுதங்களையும், கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் சோதித்து வந்தது.
இது அமெரிக்காவுக்கும், வட கொரியாவுக்கும் இடையே தீராப்பகையை ஏற்படுத்தியது. ஆனால் சற்றும் எதிர்பாராத வகையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ம் தேதி, சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரியா தலைவர் கிம் ஜாங் அன்னும் சந்தித்து உலகளவில் பரபரப்பை ஏற்படுத்தினர். அதுமட்டுமின்றி, கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் இல்லாத பகுதியாக மாற்ற வடகொரியா முன்வந்தது. இதையொட்டி இரு தரப்பிலும் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதைத் தொடர்ந்து அணு ஆயுதங்களை கைவிடுவதற்கு வடகொரியா ஆக்கப்பூர்வமான வகையில் பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காதபோதும், ஏவுகணை சோதனைகளை நிறுத்தியது.
கடந்த பிப்ரவரி மாதம் 27, 28-ம் தேதிகளில் வியட்நாம் தலைநகர் ஹனோயில் மீண்டும் உச்சி மாநாடு நடத்தி இரு தலைவர்களும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இது தோல்வியில் முடிந்தது. ஒப்பந்தம் ஏதும் கையெழுத்தாகவில்லை. இதனால் இருதரப்பு உறவில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில், வடகொரியாவின் வடக்கு பியாங்கன் பகுதியில் குறைந்த தொலைவு செல்லக்கூடிய இரு ஏவுகணைகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இவை 270 மற்றும் 420 கி.மீ. தொலைவுக்கு பறந்து சென்றுள்ளன. கடந்த ஒரு வாரத்திற்குள் 2வது முறையாக நடத்தப்படும் ஏவுகணை சோதனை இது என தென்கொரிய ராணுவம் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply