மோதல்களில் 6,261 இராணுவத்தினர் பலி, 29,551 பேர் காயம்: கோதபாய

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்து வடக்கு, கிழக்குப் பகுதிகளை மீட்கும் நடவடிக்கைகளில் 6,261 அரசாங்கப் படையினர் தமது உயிர்களைத் தியாகம் செய்திருப்பதாகப் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்தார். மாவிலாறு அணைக்கட்டு மூடப்பட்டதைத் தொடர்ந்து ஆரம்பமாகி விடுதலைப் புலிகளின் தலைவர் கொல்லப்பட்டது வரை நடைபெற்ற இராணுவ நடவடிக்கைகளில் 29,551 பேர் காயமடைந்திருப்பதாகவும், 2,556 பேர் ஊனமுற்றிருப்பதாகவும் அவர் கூறினார். சரியான தலைமைத்துவம், சிறந்த திட்டமிடல்கள், பயங்கரவாதத்தை நாட்டிலிருந்து நீக்கவேண்டும் எற்பதற்கான அர்ப்பணிப்புக்கள் போன்றனவே குறுகிய காலத்தில் இந்த வெற்றியைப் பெற்றுத்தந்ததாக கோதபாய ராஜபக்ஷ அரசாங்கத் தொலைக்காட்சியொன்றில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளைப் பாதுகாப்பதற்கு சில குழுவினர் பிரசாரங்களை முன்னெடுத்ததாகவும், பிழையாக வழிநடத்தப்பட்ட குழுவினர் தற்பொழுது உண்மையை உணர்ந்து சரியான பாதைக்குத் திரும்பியிருப்பார்கள் எனவும் அவர் கூறினார்.

“நாட்டை மீட்பதற்கு பல இளைஞர்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்திருக்கும் நிலையில், தமக்காக நிற்கக்கூடிய அரசியல் தலைவர்களைத் தமிழ் மக்கள்  தேர்ந்தெடுக்க வேண்டும்” என கோதபாய ராஜபக்ஷ சுட்டிக்காட்டினார்.

அதேநேரம், தெரிவுசெய்யப்படும் மக்கள் பிரதிநிதிகள் உண்மையாக நாட்டைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply