அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்க தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் தயாரில்லை:மாவை சேனாதிராஜா

நிலங்களைக் கைப்பற்றினாலும் தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். 
 
“இலங்கையின் போரியல் வரலாற்றில் இராணுவத்தினர் நிலங்களைக் கைப்பற்றுவதும், பதிலுக்கு விடுதலைப் புலிகள் நிலங்களைக் கைப்பற்றுவதும் மாறிமாறி நடைபெற்றுவரும் நிகழ்வுகள். இதனை மாத்திரம் வைத்துக்கொண்டு வெற்றிபெற்றுவிட்டதாகப் பெருமைப்படக்கூடாது” என அவர் இன்று சனிக்கிழமை பாராளுமன்றத்தில் கூறினார்.

பூநகரியைக் கைப்பற்றிய இராணுவத்தினருக்கு தேசிய விடுதலை முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச சபையில் பாராட்டுத் தெரிவித்தார்.

இதன் பின்னர் உரையாற்றிய மாவை சேனாதிராஜா, தற்பொழுது நாடு இருக்கும் நிலையில் இவ்வாறான பாராட்டுக்கள் தேவையா எனக் கேள்வியெழுப்பியதுடன், இதன்மூலம் தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கப் போவதில்லையெனக் கூறினார்.

தென்னிலங்கையிலுள்ள தலைவர்கள் தமிழர்களுக்குத் தீர்வொன்றைத் தருவார்கள் என்ற நம்பிக்கை தமக்கு மாத்திரமன்றி, சர்வதேச சமூகத்துக்கே இல்லாமல் போய்விட்டது எனக் குறிப்பிட்ட அவர், தமிழர்களின் விடுதலைப் போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லப்படும் எனத் தெரிவித்தார்.

அனைவரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய தீர்வொன்றை வழங்க தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் தயாரில்லை என்றார் அவர்.

இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் குரல்கள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்திருப்பதுடன், போர்நிறுத்தம் செய்யப்படாவிட்டால் தனது பதவியை இராஜினாமாச் செய்யப் போவதாக கூறியிருக்கும் தமிழக முதல்வர் மு.கருணாநிதிக்குப் பாராட்டுத் தெரிவிப்பதாகவும் மாவை சேனாதிராஜா கூறினார்.

வன்னியில் இடம்பெயர்ந்திருக்கும் 3 இலட்சம் மக்களுக்கு கடந்த சில வாரங்களாக சரியான முறையில் உணவுப் பொருள்கள் அனுப்பப்படவில்லையெனவும், வன்னிக்கு அனுப்புவதற்கான நிவாரணப் பொருள்கள் வவுனியாவில் தேங்கியிருப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

 

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply